இந்தக் கோவிலின் வேப்ப மர இலைகள் இனிக்கும் அதிசயம்!

இந்தியாவில் கிருஷ்ணருக்கு பல்வேறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக வட இந்தியாவில் ஏராளமான கோவில்கள் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதில் குஜராத்தில் அமைந்துள்ள தக்கொர் கோவில் மிக முக்கியமான ஒன்று இந்த கோவிலில் கிருஷ்ணரின் அம்சமான ரஞ்சோட் எனும் தெய்வம் மூலவராக அமைக்கப்பட்டு உள்ளார். அவர் விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். கையில் சங்கு, சக்கரம், தாமரை ஆகியவற்றை ஏந்தி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இந்த கோவிலில் இருக்கக்கூடிய மூலவர் சிலை துவாரகாதீஷ் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டது என்பது வரலாறு

இந்த கோவிலுக்கு பின் சொல்லப்படும் வரலாறு யாதெனில், கிருஷ்ணரின் பரம பக்தரான போதனா என்பவர் கிருஷ்ணரை தீவிரமாக வழிபட்டு வந்தார் . இவர் ஏராளமான துளசி மரங்களை நட்டு வளர்த்து வந்தார் . வருடத்திற்கு இருமுறை துவாரகாதீசர் கோவிலுக்கு சென்று அந்த துளசியை ரஞ்சோட் தெய்வத்துக்கு அர்ப்பணித்து வந்தார் . இதை அவருடைய வாழ்வில் எண்ணிலடங்காத முறை அவர் செய்திருந்தார்.

வயோதிகம் அடைந்து நோயுற்று பின்பாக இந்த சேவையை அவரால் செய்ய முடியவில்லை. இது குறித்த பெரும் வருத்தம் அவர் மனதில் இருந்த பொழுது, ஒருநாள் அவர் கனவில் கடவுள் தோன்றினார்.

அவர் தன்னுடைய சிலை துவாரகாதீஷ் கிருஷ்ணர் கோவிலில் இருக்கிறது, அதனை இங்கே எடுத்து வந்து பூஜிக்குமாறு அறிவுருத்தியுள்ளார். அதன்படி துவாரகாதீஷ் சென்று அங்கே கர்ப்பகிரகத்தில் இருந்த மூலவரை எடுத்துக்கொண்டு இங்கே வந்து ஸ்தாபித்தார் போதனா. அடுத்த நாள், துவரகாதீஷ்வரர் கோவிலின் கதவுகள் அதிகாலையில் திறக்கப்பட்ட பொழுது அங்கே இருந்த திருவுருவச் சிலையை காணாது அனைவரும் பதட்டம் அடைந்தனர்.

அந்த சிலையை தேடி அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்ற பொழுது இதை அறிந்த போதனா பதற்றம் உற்றார். பதற்றத்தில் தான் எடுத்து வந்த சிலையை ஒரு ஏரியில் மறைத்து வைத்தார். தேடுவதற்காக வந்திருந்தவர்கள் அந்த ஏரியில் ஈட்டியை நுழைத்து தேடிய பொழுது, அந்த ஈட்டியின் கூர்மை தாக்கி திருவுருவச்சிலையில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அதுவே அந்த திருக்கோவிலின் கோமதி முற்றத்தில் சிவப்பு நிற நீராக வழிந்தது என்றும் அது கிருஷ்ண பரமாத்மாவின் குருதி தான் எனவும் நம்பப்படுகிறது.

இன்று கூட அந்த கோமதி முற்றம் சிவப்பு நிற சாயல் கொண்டிருப்பதை நாம் காண முடியும். கோவில் வளாகத்தினுள் ஒரு வேப்ப மரம் உண்டு. அது கடவுளின் கரங்கள் தீண்ட பட்டதால் அந்த மரத்தினுடைய இலைகள் இனிப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது

குஜராத்தில் முக்கியமான கோவில்களில் தக்கோர் கோவில் முக்கியமானதாக கருதப்படுகிறது. வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான ஸ்தலம் இது. இந்து கோவில் 1772-ல் கட்டப்பட்டுள்ளது. இன்று இந்த கோவில் வழிபாட்டு தளத்திற்கு மட்டும் புகழ் பெற்றதாக இல்லாமல் பூஜை பொருட்கள் வர்த்தகத்திற்கு மிக முக்கிய மையமாக திகழ்கிறது. வருடா வருடம் இங்கே வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது வருடத்திற்கு 70 முதல் 80 லட்சம் பக்தர்கள் இந்த கோவிலை கண்டு தரிசிக்கின்றனர்.

S. சுரேஷ்
தலைமை செய்தியாசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.