நாங்கள் நாஜிக்கள் அல்ல; போரை விரும்புகிறீர்களா? உக்ரைன் அதிபர் கேள்வி
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் மீது முதல்கட்ட பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது. சர்வதேச அளவில் அவசர நிதி பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்விஃப்ட் முறையையும் அமெரிக்கா துண்டித்துள்ளது.
எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறும் ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்துள்ளதாக சாக்குபோக்கு கூறிவருகிறது. அதே வேளையில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷியா செய்து வருகிறது.
இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை.
உக்ரைன் மீது போர் தொடுக்கும் முடிவை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று புதின் கூறியுள்ளார். அதேவேளையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவும் புதின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான பதற்ற நிலையை முன்னிட்டு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று செய்தியாளர்கள் முன் தோன்றி பேசினார். அவர், ரஷ்ய கூட்டமைப்பு தலைவரை (புதின்) நான் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் பேசவில்லை. மறுமுனையில் அமைதியாக இருந்தது. இந்த நடவடிக்கையானது ஒரு பெரிய போரின் தொடக்கம் ஆகவும் அமைய கூடும் என்று ரஷ்ய மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.
நீங்கள் உக்ரைன் மக்களை விடுவிப்போம் என கூறுகிறீர்கள். ஆனால், உக்ரைனியர்கள் சுதந்திரமுடனேயே இருக்கிறார்கள். நாங்கள் நாஜிக்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நாசிச தத்துவத்தினை வெற்றி பெறுவதற்காக 80 லட்சம் பேரை உயிர் தியாகம் செய்த மக்கள் எப்படி நாஜிக்களுக்கு ஆதரவளிக்க முடியும்?
ரஷ்யாவுக்கு உக்ரைன் அச்சுறுத்தலாக இருக்கும் என நீங்கள் கூறினீர்கள். அது கடந்த காலத்தில் இல்லை. நிகழ்காலத்தில் இல்லை. எதிர்காலத்திலும் இருக்காது.
ரஷ்ய தலைமை அமைதிக்காக எங்களுடன் அமர்ந்து பேச விரும்பவில்லை எனில், உங்களிடம் பேச கூடும். ரஷ்ய மக்கள் போரை விரும்புகிறீர்களா? இந்த கேள்விக்கு பதிலளிக்க நான் ஆர்வமுடன் உள்ளேன். ஆனால் இதற்கான பதில் ரஷ்ய கூட்டமைப்பின் குடிமக்களாகிய உங்களை சார்ந்துள்ளது என கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.