தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை: சென்னையில் இன்று முதல் கூடுதலாக 90 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து புறநகர்களுக்கு மக்கள் செல்லும் வகையில் நாளொன்றுக்கு 500 மின்சார ரயில் சேவைகளை வழங்கியுள்ளது தெற்கு ரயில்வே.
கூட்ட நெரிசலால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பயணிகள் நலன் கருதி கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மக்களின் போக்குவரத்துக்கு பெரிதும் உதவிக்கரமாக இருப்பவை மின்சார ரயில்கள் தான்.
சிட்டிக்குள் உள்ள டிராஃபிக்கை கடந்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லவேண்டுமானால் பல மணி நேரங்கள் கரையும். ஆனால் அதேவேளையில் மின்சார ரயிலில் பயணித்தால் பல மணி நேரங்கள் மிச்சமாவதுடன் பணமும் மிச்சமாகும் என்பதால் நடுத்தர வர்க்கத்தினரின் பிரதான தேர்வாக மின்சார ரயில் திகழ்கிறது.
150 ரயில்கள்
இதனிடையே கொரோனா ஊரடங்கு காலத்தில் முற்றிலும் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவித்த பின்னர் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் செல்ல அனுமதி தரப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்பட்டன. 120 மின்சார ரயில்கள் மட்டுமே முதற்கட்டமாக இயக்கப்பட்டு பின்னர் அது 150 என அதிகரிக்கப்பட்டது
நேரக்கட்டுப்பாடு
பின்னர் பயணிகள் கோரிக்கையை தொடர்ந்து நாளொன்றுக்கு 320 மின்சார ரயில்களை இயக்கிய தெற்கு ரயில்வே அதற்கு நேரக்கட்டுப்பாடு உள்ளிட்ட சில விதிமுறைகளை விதித்திருந்தது. பின்னர் இந்த ரயில்களின் எண்ணிக்கையும் போதாது என பயணிகள் தரப்பில் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் சென்னையில் இருந்து 410 புறநகர் மின்சார ரயில் சேவைகள் வழங்கப்பட்டன.
தெற்கு ரயில்வே
இப்போது அந்த எண்ணிக்கையை 500-ஆக உயர்த்தும் பொருட்டு இன்று முதல் மேலும் கூடுதலாக 90 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மின்சார ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலால் கொரோனா பரவல் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கி இந்த புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.