நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்
இந்தியா – நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நேற்று நடந்தது. இந்திய அணியில் துணைகேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி உள்பட 5 வீராங்கனைகள் நீக்கப்பட்டனர். நீண்ட தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்ட ஸ்மிர்தி மந்தனா திரும்பினார். போட்டி தொடங்கும் முன்பே பலத்த மழை கொட்டியதால் சுமார் 5 மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. இதனால் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகளாக களம் புகுந்த கேப்டன் சோபி டிவைன், சுசி பேட்ஸ் ஆகியோர் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்து நல்ல தொடக்கம் கண்டனர். 6 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 53 ரன்னாக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. சோபி 32 ரன்னிலும் (24 பந்து, 6 பவுண்டரி), சுசி பேட்ஸ் 41 ரன்னிலும் (26 பந்து, 7 பவுண்டரி) கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து அமி சட்டர்த்வெய்ட், அமெலி கெர்ருடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக மட்டையை சுழற்றி அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார்கள். சட்டர்த்வெய்ட் 32 ரன்னில் (16 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆனார்.
20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. அமெலி கெர் 33 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 68 ரன்கள் விளாசி களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் ரேணுகா சிங் 2 விக்கெட்டும், மேக்னா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 19 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (4.4 ஓவரில்) பறிகொடுத்து தள்ளாடியது. ஷபாலி வர்மா (0), யாஸ்திகா பாட்டியா (0) பூஜா வஸ்த்ராகர் (4 ரன்) ஸ்மிர்தி மந்தனா (13 ரன்) விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
5-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ், கேப்டன் மிதாலி ராஜூடன் கைகோர்த்தார். இந்த இணை அடித்து ஆடி அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டது. ஸ்கோர் 96 ரன்களாக உயர்ந்த போது, ரிச்சா கோஷ் 52 ரன்னில் (29 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அத்துடன் இந்திய அணியின் நம்பிக்கை பொசுங்கியது. முன்னதாக 26 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ரிச்சா கோஷ் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை சொந்தமாக்கினார். அடுத்த ஓவரில் மிதாலி ராஜூம் (30 ரன்கள், 28 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார்.
17.5 ஓவர்களில் இந்திய அணி 128 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அமெலி கெர், ஹாய்லி ஜென்சன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அரைசதம், 3 விக்கெட், 2 கேட்ச் என்று ஆல்-ரவுண்டராக கலக்கிய நியூசிலாந்து வீராங்கனை அமெலி கெர் ஆட்டநாயகி விருது பெற்றார். நியூசிலாந்து தொடரில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணி இதுவரை வெற்றி கணக்கை தொடங்கவில்லை.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.
தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில், ‘உலக கோப்பை நெருங்கும் இந்த சமயத்தில் பந்து வீச்சு நிலையானதாக இல்லாதது கவலை அளிக்கிறது. பந்து வீச்சு கூட்டணியில் மாற்றங்கள் செய்ய முயற்சித்து வருகிறோம். ரிச்சா கோஷ் அடித்த ஷாட்கள் அருமையாக இருந்தது. அவர் வருங்காலத்தில் இந்தியாவின் சிறப்பான வீராங்கனையாக விளங்குவார்’ என்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.