பழம்பெரும் மலையாள நடிகை லலிதா காலமானார்
பிரபல பழம்பெரும் மலையாள நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 74. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட லலிதா தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து உடல்நிலை சற்று தேறியநிலையில் கொச்சியில் உள்ள தனது மகன் சித்தார்த் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.22) இரவு நடிகை லலிதா காலமானார்.
ஆலப்புழாவில் உள்ள நாடகக் கூட்டான இடதுசாரி கேரள மக்கள் கலைக் கழகத்தில் (கேபிஏசி) தனது வாழ்க்கையைத் தொடங்கிய லலிதா, 1969 ஆம் ஆண்டு கே.எஸ். சேது மாதவனின் ‘கூட்டுக்குடும்பம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். காயங்குளத்தில் இருந்த KPAC என்ற ஒரு பிரபல நாடக சபாவில் தொடர்ந்து பணியாற்றி வந்ததால் அவர் KPAC லலிதா என்று அழைக்கப்பட்டார்.
நாடக நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய லலிதா, மலையாளத்தில் குணச்சித்திர பாத்திரங்களில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து தமிழில் ‘காதலுக்கு மரியாதை’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘அலைபாயுதே’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட பல படங்களில் லலிதா நடித்துள்ளார்.
கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் லலிதா உள்ளார். இதுவரை 550-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், பிரபல மலையாள இயக்குநர் பரதனின் மனைவி ஆவார். 1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் நான்கு முறை கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்.
நடிகை லலிதாவின் மறைவுக்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.