ஈரானில் பள்ளிக்கூடம் மீது போர் விமானம் விழுந்து கோர விபத்து
ஈரானின் வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில், தப்ரிஸ் நகரில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான எப்-5 ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் 2 விமானிகள் மட்டும் இருந்தனர்.கிளம்பிய சிறிது நேரத்தில், தப்ரிஸ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு மேலே பறந்து கொண்டிந்தபோது விமானம் திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதை தொடர்ந்து, விமானம் குடியிருப்பு பகுதியில் விழுவதை தவிர்க்க அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர். எனினும், பள்ளிக்கூட வளாகத்தில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தின் மீது விமானம் விழுந்தது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும், விபத்து நடந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரும் பலியாகினர்.
கொரோனா காரணமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டு, மாணவர்கள் யாரும் இல்லாதததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.