கன்னட சினிமாவில் கால்பதிக்கும், எடியூரப்பா!
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா. முதல்-மந்திரியாக இருந்த அவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய பிறகு பெரும்பாலும் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கர்நாடகத்தின் பலம் வாய்ந்த தலைவராக விளங்கும் எடியூரப்பா, சினிமாவிலும் கால்பதித்து உள்ளார். கன்னடத்தில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகும் கன்னட படத்தில் எடியூரப்பா முதல் முறையாக நடிக்கிறார். அதுவும் முதல்-மந்திரி வேடத்திலேயே அவர் தோன்ற இருப்பது சிறப்பு அம்சமாகும்.எடியூரப்பா நடிக்கும் கன்னட படத்தின் பெயர் ‘தனுஜா’ ஆகும். இந்த படத்தை இயக்குனர் ஹரீஷ் எம்.டி.ஹள்ளி இயக்குகிறார். இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாரிக்கப்படுகிறது. அதாவது நீட் தேர்வை எழுத முடியாமல் இருந்த மாணவிக்கு, அப்போது முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா தேவையான உதவிகளை செய்து, 350 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தபடியே மாணவி தேர்வை எழுதி இருந்தார்.இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தனுஜா படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் முதல்-மந்திரி வேடத்தில் எடியூரப்பா நடித்திருக்கிறார். அவர், சம்பந்தமான காட்சிகள், பெங்களூரு குமராகிருபாவில் உள்ள, ஹாவேரி இல்லத்தில் வைத்தே நடைபெற்று இருந்தது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் ஹரீஷ் எம்.டி.ஹள்ளி எடுத்து முடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு 90 சதவீதம் நிறைவு பெற்றிருக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.