அமீரகத்தில் பழங்கால கார்களின் அணிவகுப்பு!!!

அமீரகத்தில் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடந்தது. இதில் அந்த கார்கள், ராசல் கைமாவில் உள்ள ஜெபல் ஜைஸ் மலைப்பகுதி வழியாக வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இத்தாலி நாட்டில் பிரபலமான ‘1,000 மிக்லியா’ என்ற தலைப்பில் ஆண்டுதோறும் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்கால கார்கள் சேகரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இத்தாலியில் நடத்தப்படும் இந்த அணிவகுப்பில் 1,600 கி.மீ தொலைவுக்கு பிரசியா மற்றும் ரோம் நகரங்களுக்கு இடையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறதுநடப்பு ஆண்டில் இந்த பழங்கால கார்களின் அணிவகுப்பினை அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் புஜேராவில் இந்த பழங்கால கார்களின் அணிவகுப்பு தொடங்கியது. வளைகுடா நாடுகளை சேர்ந்த 44 பேர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். தொடர்ந்து 2-வது நாளாக நேற்று ராசல் கைமாவின் உயரமான மலைப்பகுதியான ஜெபல் ஜைசில் கார் அணிவகுப்பு நடைபெற்றது.பழங்கால கார்களின் அணிவகுப்பை பார்வையிட இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். பழங்காலத்தில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு சாலையில் சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.1950-ம் ஆண்டில் தொடங்கி 1970-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்கள் இதில் பங்கேற்றன. மலைப்பகுதியில் வளைவுகளில் சென்ற பல்வேறு வண்ணங்களிலான பழங்கால கார்கள் காண்போரை வெகுவாக கவர்ந்தது. இறுதியாக அந்த கார்கள் சார்ஜா வழியாக துபாய் நகரை வந்தடைந்தன. இந்த அணிவகுப்பில் பங்கேற்றவர்களும், பார்வையாளர்களும் தங்களுக்கு புதுமையான அனுபவம் கிடைத்ததாக தெரிவித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

Leave a Reply

Your email address will not be published.