மொத்தமே 5 ஆஸ்பத்திரிகள்– ஆப்கானிஸ்தானின் பரிதாப நிலைமை!!!
ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா அலை அந்த நாட்டை சீரழிக்கிறது. என்னவொரு கொடுமை என்றால் ஒட்டுமொத்த நாட்டுக்குமே மொத்தம் 5 ஆஸ்பத்திரிகள்தான் கொரோனா சிகிச்சை அளிக்கின்றன.டாக்டர்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் 33 ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு விட்டன. காபூல் நகரில் ஆப்கான் ஜப்பான் தொற்று நோய் ஆஸ்பத்திரி என்ற ஒரே ஒரு ஆஸ்பத்திரிதான் இயங்கி வருகிறது. அங்கு உயிரை உறைய வைக்கிற குளிர்காலம் வேறு. நோயாளிகள், போர்வைகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.அந்த ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் முகமது குல் லிவால் கூறும்போது, “எங்களுக்கு ஆக்சிஜன் தொடங்கி மருந்துப்பொருட்கள் வரை தேவை. 100 படுக்கைகள் இருக்கின்றன. கொரோனா வார்டு நிரம்பி உள்ளது. ஜனவரி இறுதிவாக்கில் தினமும் ஒன்றல்லது 2 நோயாளிகள் வந்தனர். தற்போது கடந்த 2 வாரங்களாக தினமும் 10 முதல் 12 நோயாளிகள் வரை அனுமதிக்கப்படுகின்றனர். நிலைமை நாளுக்கு நாள் மோசமாக உள்ளது” என குறிப்பிட்டார்.
அங்கு முககவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல்கூட சாத்தியம் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இப்போதைய தேவை வயிற்றுக்குச்சாப்பாடு, அப்புறம்தான் கொரோனா நிவாரணம் என்ற பரிதாப நிலை உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.