ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் நன்றி…
- இந்திய நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, தமிழ்நாட்டின் நீட் விலக்கிற்கு ஆதரவு உள்ளிட்டவை குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், ”சுயமரியாதை, தனித்துவமான கலாசாரம் மற்றும் அரசியல் வேர்களைக் கொண்ட தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்கு பாராளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்துள்ளீர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக எடுத்துரைத்த, உங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு, அனைத்துத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.இந்திய நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி, டி.ஆர். பாலு ஆகியோர் நேற்று பேசினர். அப்போது, ”தமிழ்நாட்டில் கூட்டாட்சியை மதிக்காமல் மன்னராட்சி போல் மோதி அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் நீட் விவகாரம் குறித்தும் தமிழர்களின் வரலாறு குறித்தும் அறியாமல் மத்திய அரசு நடந்து கொள்கிறது.” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.நீட் விவகாரத்தில் திரும்பத்திரும்ப வந்தும் தமிழ்நாட்டின் குரலை கேட்காமல் மத்திய அரசு அவமதிப்பதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.