கிறிஸ்துமஸ் விழா !
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விழாவே கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ்' என்பதற்கு
கிறிஸ்துவை வழிபடுதல்’ என்று பொருள். இலங்கைத் தமிழர்கள் இதை `நத்தார்’ பண்டிகை என்று அழைக்கிறார்கள்.
கி.பி.2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித இரனேயுஸ், இயேசு பிறந்தநாள் டிசம்பர் 25 என்று குறிப்பிடுகிறார். முதல் 3 நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் மிகுந்த கொடுமைகளுக்கு உள்ளாகி இருந்ததால், கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படவில்லை.
கி.பி.313ஆம் ஆண்டில் ரோம அரசு கிறிஸ்தவர்களுக்கு சமய சுதந்திரம் அளித்த பிறகே, கிறிஸ்துவின் பிறப்பு விழாவாக சிறப்பிக்கப்பட்டது. முதன்முதலாக கி.பி.342ஆம் ஆண்டு, டிசம்பர் 25ந்தேதியில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட போப் முதலாம் ஜுலியஸ் அழைப்பு விடுத்ததாக நம்பப்படுகிறது.
ரோமில் தொடங்கிய கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எகிப்துக்கும், 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்துக்கும், பின்னர் மற்ற நாடுகளுக்கும் பரவியது.
கிறிஸ்துமஸ் குடில்:
இறைமகன் இயேசு பெத்ல கேமில் உள்ள மாட்டுத் தொழுவம் ஒன்றில் ஏழ்மை நிலையில் பிறந்தார். அன்னை மரியா குழந்தை இயேசுவைத் துணிகளில் பொதிந்து, அங்கிருந்த தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
அப்போது வயல்வெளியில் கிடையைக் காத்துக் கொண்டிருந்த இடையர்கள், வானதூதர்கள் மூலம் செய்தி அறிந்து இயேசுவைக் காணச் சென்றனர். இத்தாலியில் வாழ்ந்த அசிசி புனித பிரான்சிஸ், இயேசு பிறந்த ஏழ்மை நிலையை அதிகம் தியானித்து வந்தார்.
முதன்முதலாக 1223 டிசம்பர் 25ந்தேதி, கிரேச்சியா என்ற இடத்திலிருந்த குகையில் இயேசு பிறந்த காட்சியை மனிதர்களையும், மிருகங்களையும் கொண்டு அவர் அமைத்தார். அதிலிருந்தே கிறிஸ்துமஸ் விழாவின்போது குடில் அமைக்கும் பழக்கம் உருவானது.
கிறிஸ்துமஸ் கீதம்:
இயேசு பிறந்தபோது, பெத்லகேம் வயல்வெளியில் இருந்த இடையர்களுக்கு தோன்றிய வானதூதர், “இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” என்றார்.
உடனே விண்ணகத் தூதர் பேரணி அவருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது. வானதூதர்கள் பாடிய இந்த பாடலே முதல் கிறிஸ்துமஸ் கீதம் (கேரல்) ஆகும்.
இதைப் பின்பற்றி இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் கிறிஸ்துமஸ் கீதங்களை ஆலயங்களில் பாடும் வழக்கம் 4ஆம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. தெருக்களில் கிறிஸ்துமஸ் கீதங்களைப் பாடும் வழக்கம் அசிசி புனித பிரான்சிசால் 13ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் நட்சத்திரம்:
இயேசு பிறந்த போது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக் கத்திய ஞானிகள் சிலர் அவரை வணங்கச் சென்றனர். அவர்கள் வானியலில் சிறந்து விளங்கிய பெர்சிய மத குருக்களான கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்பது கிறிஸ்தவ மரபு.
அந்த ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்தவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. 16ஆம் நூற்றாண்டு முதலே கிறிஸ்துமஸ் விழாக்களை நட்சத்திரங்கள் அலங்கரித்து வருகின்றன.
கிறிஸ்துமஸ் தாத்தா:
துருக்கி நாட்டின் மிரா நகரில் கி.பி.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ ஆயர் புனித நிக்கோலாஸ். இவர் ஏழைகளுக்கு உதவி செய்வதிலும், குழந்தைகளை மகிழ்விப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார். சிறப்பாக பகிர்தலின் விழாவாகிய கிறிஸ்துமஸ் நாட்களில் ஏழை குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தார்.
அவரது முன்மாதிரியைப் பின்பற்றி, கிறிஸ்துமஸ் காலத்தில் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்விக்கும் வழக்கம் 19ஆம் நூற்றாண்டில் தோன்றியது. கிறிஸ்துமஸ் தாத்தாவைக் குறிக்கும் சான்டாகிளாஸ்' என்ற பெயர் செயின்ட் நிக்கோலாஸ் என்பதில் இருந்தே உருவானது. தொப்பி, தொப்பையுடன் கூடிய தற்போதைய
சான்டாகிளாஸ்’ உருவம், தாமஸ் நாஸ்ட் என்ற அமெரிக்கரால் 1863ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
கிறிஸ்துமஸ் மரம்:
ஃபிர் மரத்தை நிலைவாழ்வின் சின்னமாக கருதிய ஸ்காண்டிநேவிய மக்கள் கி.பி.7ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களாக மாறினர். பைபிளில் காணப்படும் வாழ்வின் மரத்தோடு தொடர்புபடுத்தி, அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஃபிர் மரத்துக்கு முக்கிய இடம் அளித்தனர்.
13ஆம் நூற்றாண்டில் இந்த வழக்கம் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. 15ஆம் நூற்றாண்டின் இறுதியில், கிறிஸ்துமஸ் மரங்களை மெழுகுவர்த்திகளால் அழகுபடுத்தும் பழக்கம் உருவானது. தாமஸ் ஆல்வா எடிசனின் உதவியாளர் எட்வர்ட் ஜான்சன், 1882ஆம் ஆண்டு முதன்முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்தார்.
கிறிஸ்துமஸ் கேக்-வாழ்த்து அட்டை
கிறிஸ்துமஸ் விழாவில் பகிர்தலை அடையாளப்படுத்தும் விதமாக கேக்குகளை வெட்டி பங்கிடும் வழக்கம் 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கியது.
1843ஆம் ஆண்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்றி கோல் என்பவர் முதன்முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு அனுப்பினார்.
இவைதான் உலக வரலாற்றின் முதல் வாழ்த்து அட்டைகள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன் பரிசுப் பொருட்களை பகிர்ந்துகொள்ளும் வழக்கம் கடந்த நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தது.
டெனிஸ்டன் தலைமை செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.