சிவாஜி கணேசனின் 165 வது படமான “கௌரவம்”
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 165 வது படமான “கௌரவம்”தமிழ்த் திரைக்கு கௌரவம் ஆற்றி
48 ஆண்டுகள் நிறைவடைகின்றது….!
வக்கீல் பாத்திரத்தில் பல நடிகர்கள் பல படங்களில் நடித்திருந்தாலும்
“கௌரவம்”படத்தில் நடிப்பின் நாயகன் ஏற்ற “பெரிஸ்டர் ரஜினிகாந்த்”
பாத்திரம் போல் இன்றுவரை எந்தக் கலைஞர்களும் பரிமளிக்கவில்லை, அந்த நடிப்பு ஓர் சாதனை என்றே கூறவேண்டும். இப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் கம்பீரமான நடை,உடை,பாவனை,பைப் பிடிக்கும் ஸ்டைல்,பீர் க்ளாசை கையில்
ஏந்தியபடி ஆங்கிலத்தில் கர்ஜிக்கும் மிடுக்கு,சில காட்சிகளில் உதட்டைப் பிதுக்கி செய்யும் உடல்மொழி நடிப்பு
போன்றன சிவாஜி என்ற மனிதரின் மேன்மை நிறைந்த நடிப்புக் கலைத்துவம் அலாதியானது
என்பதை தமிழ் சினிமாவுக்கு மீண்டும்
எடுத்து காட்டியுள்ளது.நகைச்சுவை நடிகர் வை.ஜி.மகேந்திரனின் தந்தையான பார்த்தசாரதியின் “கண்ணன் வந்தான்”என்ற மேடை நாடகம் மக்களிடையே அமோக வரவேற்புடன் பல தடவைகள் மேடையேறியது.இந்நாடகத்தை பல தடவைகள் கண்ணுற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,அதில் வரும் “பெரிஸ்டர் ரஜினிகாந்த் “பாத்திரத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டு,
இந்நாடகத்தை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கவே,அதுவே பின் “கௌரவம்” படமானது.கௌரவம் என்பது செய்யும் தொழிலிலேதான் இருக்க வேண்டும் என இப்படத்தின் நாயகன் “பெரிஸ்டர் ரஜினிகாந்த்”தின் கொள்கையாக இருக்கும். சிவாஜி கணேசன் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார்.ஒரு பாத்திரம் வக்கீல் ரஜினிகாந்த்,மற்றையது வளர்ப்பு மகனாக வரும் கண்ணன் வேடம், அவரும் ஓர் வக்கீல்.கண்ணன் பாத்திரம் பெரிஸ்டர் ரஜினிகாந்த் பாத்திரத்திற்கு நேரெதிரானது.
கண்ணன் பாத்திரம் ஆத்திகம் நிறைந்ததாகவும்,வக்கீல் பாத்திரம் நாத்திகம் கொண்டதாகவும் இருவேறு
குணங்களில் அமைந்திருக்கும்.ஒரே சிவாஜி இருவேறு வேடங்களில் ஒன்றுக்கொன்று நிறைந்த வித்யாசமான நடிப்பிலும்,
உடல்மொழியிலும் தனது அபாரம் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார்.
இப்படத்தின் சில காட்சிகள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இல்லத்தில் படமாக்கப்பட்டது.
தனக்கு கிடைக்க வேண்டிய நீதிபதி பதவி ஓர் சாதாரண வக்கீலுக்கு கிடைத்ததால் வெகுண்டெழுந்த நாயகன் “பெரிஸ்டர் ரஜினிகாந்த்”,தன் திறமையை காட்டி தான் யாரென இச்சமூகம் உணரவேண்டும் என்ற நோக்கில் ஒரு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மோகன்தாஸ்(மேஜர் சுந்தரராஜன்) என்ற கொலைக் குற்ற கைதியை தன் வாதத்திறமையால் காப்பாற்றி விடுதலை அளிக்கின்றார். நீதிமன்றத்தில் “பெரிஸ்டர் ரஜினிகாந்த்”வாதாடும் ஸ்டைலே படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்து நிற்கின்றது.இதே மோகன்தாஸ் மீண்டும் ஓர் கொலை வழக்கை சந்திக்க நேர்கின்றது.அவ்வழக்கில் குற்றவாளிக்கு எதிராக அரசு தரப்பு வக்கீலாக தன் வளர்ப்பு மகன் கண்ணன் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் ஆஜராகவே,கௌரவம் திரைப்படம் விறுவிறுப்பு அடைய ஆரம்பிக்கின்றது.பெரியப்பா என அன்புடன் அழைக்கும் கண்ணன் பாத்திரம் அவருக்கெதிராக தொழிலில் மோதும் போது கதையின் சுவாரஸ்யம் மெருகேற்கின்றது.
இப்படத்தின் சூழ்நிலைக்கேற்றவாறு கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகளில் ஒரு ராஜாங்கமே நடாத்தியிருப்பார்.வளர்த்த மகன் கண்ணன் வீட்டை விட்டு வெளியேறும் போது,”கிளிக்கு றெக்க முளைத்துடுத்து ஆத்தவிட்டு பறந்த போயுடுத்து”என பிராமண வட்டார மொழியில் தன் மனைவி செல்லம்மாவை(பண்டரிபாய்)பார்த்து கூறிவிட்டு “பாலூட்டி வளர்த்த கிளி “பாடல் பாடும் கட்டத்தில் சிவாஜியின் நடிப்பு,சௌந்தரராஜனின் வசீகரக் குரல்,எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைஜாலம் போன்றன திரையரங்கை மிரட்டி விடுகின்றன.
இதேபோல் “நீயும் நானுமா “பாடலில் சிவாஜி,கவியரசு,டி.எம்.எஸ்,எம்.எஸ்.வி கூட்டணி புரியும் அட்டகாசம் ரசிகர்களின் நெஞ்சங்களில் என்றும் தஞ்சம் காணும் விதத்தில் அமைந்துள்ளது.இப்பாடல் காட்சியில்
சதுரங்க மேடையமைத்து வயதான,
இளமையான இரு ஜோர்ஜ் மன்னர்கள் மோதும் விதத்தில் “மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே”என இரு சிவாஜிகளும் தோன்றும் போது உண்மையான ஜோர்ஜ் மன்னர்களை நேரில் கண்ட அனுபவம் நமக்கு ஏற்படுகின்றது.சிவாஜிக்கு இப்படத்தில் இவ்வேடங்களில் ஒப்பனை செய்த சிவாஜியின் ஆஸ்தான ஒப்பனையாளர் ரங்கசாமி பாராட்டுக்குரியவர்.மேலும் இப்பாடலில் “அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்,அவர்மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம் “
என வரும் கவியரசின் வரிகள் வைர வரிகளாக அமைந்திருக்கும்.
உச்சக்காட்சியில் தன் மனைவி செல்லாவிடம்(பண்டரிபாய்)தான் வாதாடி ஜெயித்த ஒவ்வொரு வழக்கு கோவைகளையும் எடுத்துக் காட்டி தன்
ஆளுமையை வெளிப்படுத்தும் கட்டத்திலும்,சம்பந்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு தனக்கெதிராக வழங்கப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாத “பெரிஸ்டர் ரஜினிகாந்த்”உயிரை விடும் காட்சியும்,
“பெரிஸ்டர் ரஜினிகாந்த்”துக்கு,
நீதிபதி பதவி (ஜஸ்டிஸ் போஸ்ட்)
கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சி நிறைந்த செய்தியை கண்ணன், தன் பெரியப்பாவிடம் கூற வரும் தருணத்தில் பெரிஸ்டர் இறந்து கிடக்கும் காட்சியில் கண்ணன் சிவாஜியின் நடிப்பும் “கௌரவம்” படத்திற்கு மேலும் கௌரவம் செய்யப்பட்டது போல் அமைந்துள்ளது.
நாகேஷின் நகைச்சுவையும் வரவேற்புக்குரியது. மனநிலை பாதிக்கப்பட்ட “காதம்பரி”வேடமேற்ற ரமாபிரபாவின் நடிப்பு அருமை.பெரிஸ்டர் ரஜினிகாந்த்துக்கு மனைவியாக வரும் செல்லம்மா(பண்டரிபாய்) பாத்திரம் மென்மை நிறைந்தது…..!தென்னகத்தில்
“கௌரவம்”திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் இமாலய வெற்றியுடன் ஓடியது. இலங்கை கொழும்பிலும்,யாழிலும் அமோக வெற்றி கண்டது “கௌரவம் “.
இது போன்ற படங்களை நாம் காணலாமே தவிர இக்கணிணியுகத்தில் மீண்டும் உருவாக்க முடியாது என சவால் விட்டு கூறலாம்.சிவாஜி கணேசன் இல்லத்தின் மாடிப்படியேறும் சுவரில் “கௌரவம்”படத்தில் சிவாஜி ஏற்ற ஜோர்ஜ் மன்னர் படம் மாட்டப்பட்டிருக்கும்.”கௌரவம்” பட சாயலில் பின்னாளில் ரஹ்மான்,
நாஸர் நடித்த”கறுப்பு வெள்ளை”படம் வெளியானது.
நடிகர்கள்:சிவாஜி கணேசன்
உஷாநந்தினி
நாகேஷ்
பண்டரிபாய்
மேஜர் சுந்தரராஜன்
வை.ஜி.மகேந்திரன்
ரமாபிரபா
ஜெயக்குமாரி
வி.கே.ராமசாமி
பூர்ணம் விஸ்வநாதன்
செந்தாமரை
நீலு
வீரராகவன்
ஐ.எஸ்.ஆர்
விஜயன் மற்றும் பலர்.
இயக்கம்,கதை,வசனம்:வியட்நாம் வீடு சுந்தரம்
தயாரிப்பு:வியட்நாம் மூவிஸ் எஸ்.ரங்கராஜன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்கள்:கவியரசு கண்ணதாசன்
ஒளிப்பதிவு:ஏ.வின்சென்ட்
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.