பொதுத்துறைக்கு மூடுவிழா நடத்துவது வேதனை தரும் விஷயம் – ப.சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னுடைய கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் தொகுதி செட்டிநாட்டில் அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும், காரைக்குடியில் சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி. தமிழக அரசு தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

2022- 23 வரவு செலவு அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு இவ்வளவு நிதி நெருக்கடியிலும் தன்னுடைய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். எல்லா வகையிலும் மக்களுக்கு மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிக்கும் வகையில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. இதே கட்டுப்பாடு, இதே கடமை உணர்வோடு அவர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் இவ்வளவு தாமதம் வருத்தத்தை தந்துள்ளது. புதிய துணைவேந்தரை விரைவில் நியமிக்க வேண்டும். கொடநாடு மறு விசாரணை வழக்கில் உள்ளது. அதை பற்றி நான் என்ன கருத்து கூறுவது. கொடநாடு சம்பவத்தை பற்றி விசாரித்து யார் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடித்து சட்டப்படி உரிய தண்டனையை வழங்க வேண்டும். நடந்தது குற்றம். குற்றம் நடக்கவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. குற்றவாளி யார்?

கேஸ் விலை உயர்ந்து கொண்டேதான் செல்லும். இந்த ஆட்சி இருக்கும் வரை கேஸ் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும் ஆட்சி மாறினால் தான் பெட்ரோல், டீசல், கேஸ் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது கிடையாது.

Also read: திருச்சியில் பெரியாருக்கு சிலை வைக்கக் கூடாது: ஆட்சியர் அலுவலகத்தில் அர்ஜூன் சம்பத் மனு

சீனாவும் அங்கு ராணுவ தளவாடத்தை குவிக்கவில்லை. ஆனால், நம்முடைய செல்வாக்கு பகுதி என்று நினைக்கும் இந்து மகாசமுத்திர பகுதியில் நம்முடைய செல்வாக்கு கடந்த 7 ஆண்டில் சிதைந்து வருகிறது. மத்திய அரசு தான்தோன்றித்தனமாக பழைய வரலாறு தெரியாமல், பழைய நல்லுறவு தெரியாமல், பழைய வரலாற்று குறிப்புகளை படிக்காமல் வெளிநாட்டு கொள்கைகளை வகுத்துக் செயல்படுவதால் நம்முடைய செல்வாக்கு அண்டை நாடுகளில் குறைந்து வருகிறது.

சரியான வெளிநாட்டு கொள்கை இல்லை. வெளிநாட்டு கொள்ளையை வகுத்து எடுத்து நடத்துவதற்கான சரியான நபர்கள் டெல்லியில் கிடையாது. பொதுச் சொத்துக்களை மொத்த விலைக்கு விற்கின்றனர். பொதுத்துறையை மூடுவிழா நடத்துவது வேதனை தரும் விஷயம். கடுமையாக கண்டிக்க வேண்டிய செயல். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கில் யாரிடமும் ஆலோசிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் அறிவிக்கவில்லை. அறிவித்தால் பெரிய அமளியாகியிருக்கும். ஆர்.எஸ்.எஸ். தொழிற்சங்கம் கூட இதை எதிர்த்து வருகிறது.

அரசு நேரடியாக கடன் வாங்குவது ஒருபுறமிருக்க, அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் கடன் வாங்குவது இயல்புதான். ஒன்றும் அதிசயம் கிடையாது. நாங்கள் வேறு நிதியமைச்சரை வைத்து எப்படி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது என்று சொல்கிறோம்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடரும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அதனால் வெற்றி வாய்ப்பும் பிரகாசம் தான். ஆப்கானிஸ்தானில் ஒரு காலத்தில் இந்தியா செல்வாக்காக இருந்தது. நல்லுறவுடன் இருந்தது. இன்று அந்த இடம் அபகரிக்கப்பட்டு காலியாக உள்ள இடத்தில் பாகிஸ்தான் உட்காருமோ என்ற அச்சம் உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.