பெங்களூருவில் பெற்றோர்கள் பீதி
ஆகஸ்ட் மாதம் முதல் 2 வாரங்களில் பெங்களூருவில் சுமார் 500 குழந்தைகளுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளதால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர்.
கர்நாடகா அரசு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க முடிவெடுத்த சூழ்நிலையில் 2 வாரங்களில் 500 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று என்பது உண்மையில் அனைவருக்குமான பீதிதான்.
0-9 வயதுடைய குழந்தைகள் 88 பேருக்கும், 10-19 வயது குழந்தைகள் 305 பேருக்கும் கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. புதிதாக தொற்றியுள்ள 499 பேரில் 263 பேருக்கு கடந்த 5 நாட்களில் தொற்று ஏற்பட்டதில் 88 கேஸ்கள் 9 வயதுக்கும் கீழான குழந்தைகள் என்பது எச்சரிக்கை தருவதாகும். 10 முதல் 19 வயதுடையோர் 175 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.
டி.ரந்தீப் என்ற கமிஷனர் கூறும்போது கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் ஆபத்தான அளவில் அதிகரிக்கவில்லை என்கிறார்.
ஜூலை கடைசி வாரம் முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை 19 வயதுக்குக் கீழானோருக்கு கொரோனா பாதிப்பு 14% என்று கூறப்படுகிறது.
மேலும் மருத்துவமனையில் குழந்தைகள் சீரியஸ் கொரோனாவுக்கு அனுமதிக்கப்படுகின்றனரா என்பதையும் கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் நோய் அறிகுறிகளற்றவர்களாகவே இருக்கின்றனர், அதனால் பயப்படத் தேவையில்லை என்கிறது பெங்களூரு நகராட்சி. கடந்த 10 நாட்களில் குழந்தைகள் யாரும் பலியாகவில்லை.
பெற்றோர் கோவிட் பாதிப்பை குழந்தைகளுக்கு பரப்புகின்றனர், அதே போல் வெளியே சென்று விட்டு வரும் குழந்தைகள் கொரோனா பாதிப்பை பெற்றோருக்கும் பரப்புகின்றனர்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னும் வரவில்லை மேலும் குழந்தைகள் மற்றவர்களுடன் விளையாடும்போது முகக்கவசம் உள்ளிட்ட கோவிட் விதிமுறைகளையும் சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பதில்லை.
கோவிட் இரண்டாவது அலையில் ஆண்டிபாடிகள் அதிகமான குழந்தைகள் எண்ணிக்கை பெரியோர் எண்ணிக்கைக்குச் சமம் என்கின்றனர் மருத்துவர்கள்.