மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு இதை முடிவுக்கு கொண்டுவர விழிபிதுங்கும் ஆய்வாளர்கள்
பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு இருக்கும் 1.12 கோடி மக்களிடம் கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
என்னதான் சீனாவில் முதல் முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலும், கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மூலம் அந்நாடு மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. கொரோனா பரவ தொடங்கியதுமே முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கைச் சீனா அறிவித்தது. வீடுகளை விட்டு வெளியே வர மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு முழுமையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, வீடுகளை விட்டு வெளியே வர மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் உலகமே கொரோனா பாதிப்பு காரணமாகத் திண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், சீனா மட்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. பார்ட்டிகள், பட்டமளிப்பு விழா என கிட்டதட்ட வழக்கமாக அனைத்து நடவடிக்கைகளையும் சீனா தொடங்கிவிட்டது. அதி தீவிரமான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பாதிப்பை மிகச் சிறப்பாகக் கட்டப்படுத்தியது. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் சீனாவை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இந்த முறை டெல்டா கொரோனா பாதிப்பு.