2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி
தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் பெற செல்போன் செயலி உள்ளது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சமூகவலைதளம் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை மும்பையில் 19 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். எனவே, முதல் கட்டமாக மின்சார ரயில்களில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 2ஆவது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் முடிந்தவர்கள் வருகிற 15ஆம் தேதி முதல் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம்.
தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் பெற செல்போன் செயலி உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்ட விவரங்களை கொடுத்து அதில் டிக்கெட், மாத சீசன் பாஸ் பெறலாம். ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் நேரடியாகவும் டிக்கெட், மற்றும் பாஸ் பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் வார்டு ஆபிஸ், புறநகர் ரயில்நிலையங்களிலும் டிக்கெட் பெறலாம். இந்த சீசன் பாஸ்களின் உண்மை தன்மையை கண்டறிய க்யுஆர் கோடு வழங்கப்படும்.