மழைக்காலத்தில் உண்டாகும் சளி தொல்லைகளுக்கு 8 எளிய வீட்டுக் குறிப்புகள்

மருந்து 1: மழைக்காலத்தில் குளித்து முடித்துவிட்டு நம் உடம்பை துவட்டுவதற்குள் பத்து முறையாவது தும்மி விடுவோம். இது போன்ற சமயங்களில் கொதிக்கும் தண்ணீரில் கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் சுக்கு தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து 5 நிமிடம் கழித்து வாய் பொறுக்கும் சூட்டில் ஆற வைத்துக் பருகினால் சளி தொந்தரவு ஏற்படாமல் சுவாசக் குழாய்களில் இருக்கும் அடைப்புகள் நீங்கும்.

மருந்து 2: தலையில் நீர் கோர்த்து பாரமாக இருப்பது போல உணர்ந்தால் ஒரு டம்ளர் சூடான பாலில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகுத்தூள் கலந்து, சிட்டிகை அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து மூன்று நாட்கள் பருகினால் தலையில் இருக்கும் நீர் முழுவதும் இறங்கி நல்ல ஒரு சுறுசுறுப்பு உண்டாகும்.

மருந்து 3: மார்பு பகுதியில் சளி பிடித்து ‘கர் கர்’ என்று சத்தம் வருகிறதா? இது போன்று கட்டிய மார் சளியில் இருந்து விடுபட ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடியுடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வர சட்டென குறையும். சீரக பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வர, சளி மற்றும் சளியால் வரும் இருமல் இரண்டிலிருந்தும் நல்ல நிவாரணம் கிடைக்கும். –

– மருந்து 4: பூண்டில் இருக்கும் அலிசின் என்னும் ஒருவகையான மூலப்பொருள் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்த்து செயல்படுகிறது எனவே இது இயற்கையாகவே சளி பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். ஒன்றிரண்டு பூண்டு பற்களை தினமும் லேசாக எண்ணெயில் வதக்கி மென்று தின்று வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மருந்து 5: நாட்பட்ட சளி நீங்க சின்ன வெங்காயம், தேன் மற்றும் இஞ்சி ஆகியவற்றின் சாற்றை சரிசமமான அளவுகளில் எடுத்துக் கொண்டு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளையும் சாப்பிட்டு வர இரண்டே நாட்களில் சளித்தொல்லை நீங்கும். அல்லது கொஞ்சம் மிளகுத் தூளுடன் தேன் கலந்து மூன்று வேளை சாப்பிட சளி கரைந்து வெளியேறும்.

மருந்து 6: நெஞ்சில் இருக்கும் கட்டியான சளியை கூட கரைக்க கொஞ்சம் கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து வைத்து லேசாக சூடேற்றி அதனை நெஞ்சுப் பகுதியில் தடவி வர வேண்டும். இதனை குழந்தைகளுக்கு செய்ய இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும் அல்லது துளசி மற்றும் கற்பூரவள்ளி இலைகளை வெறும் வயிற்றில் மென்று தின்று வர சளித்தொல்லை நீங்கும்.

மருந்து 7: கொதிக்கும் தண்ணீரில் நாலைந்து சொட்டு யூகலிப்டஸ் எண்ணெய் துளிகளை ஊற்றி மூன்று நாட்கள் ஆவி பிடித்து வந்தால் தலைபாரம், மார்பு சளி, ஜலதோஷம் ஆகியவை உடனடியாக தீரும்.

மருந்து 8: ஆஸ்துமா, சைனஸ் போன்ற தீவிர பிரச்சினைகள் இருப்பவர்கள், மூச்சு திணறல் அடிக்கடி உண்டாகி அவதிப்படுபவர்கள் திப்பிலி, கண்டங்கத்திரி, சிந்தில் கொடி ஆகியவற்றை தலா 5 கிராம் அளவிற்கு எடுத்து நன்கு பொடித்து அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து 100 மில்லியாக குறைந்ததும் அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் சுவைக்கேற்ப தேன் கலந்து காலை, மாலை இருவேளையும் மூன்று மாதம் பருக சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.