கோவை விமான நிலையத்தில் தொழிலதிபர் இடம் இருந்து 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் தொழிலதிபரிடம் இருந்து 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார். தொழிலதிபரான இவர், அப்பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சசிகுமார் தொழில் நிமித்தமாக சென்னை செல்வதற்காக திருப்பூரில் இருந்து கோவை விமானம் நிலையத்திற்கு வந்தார். இண்டிகோ விமானம் மூலம் சென்னை செல்வதற்காக விமான நிலையத்திற்குள் சென்றார். அப்போது சசிகுமார் கொண்டு வந்த உடைமைகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. உடமைகளை ஸ்கேன் செய்தபோது, அவர் கொண்டு வந்த பையில் 92 துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து, விமான நிலைய அதிகாரிகளுக்கும், பீளமேடு காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் சசிகுமாரிடம் விசாரணை மேற்கொண்ட போது, முறையாக அனுமதி பெற்று துப்பாக்கி லைசன்ஸ் வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் கவனக்குறைவாக மறந்து உடைமைகளுடன் துப்பாக்கி குண்டுகளை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். எனினும் தொழிலதிபர் சசிகுமாரையும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டுகளையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பீளமேடு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகளின் புகாரின் பேரில் துப்பாக்கி குண்டுகள் எடுத்து வரப்பட்டது குறித்து சசிகுமாரிடம் பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓரே நேரத்தில் 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது, கோவை விமான நிலைய வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சார்ஜா, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அவ்வப்போது பயணிகளிடம் துப்பாக்கிகள், குண்டுகள், கடத்தல் தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுவது உண்டு. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

NEWS: S.MD. ரவூப்

Leave a Reply

Your email address will not be published.