ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறு மென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு
ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகள் இவ்வாண்டின் இறுதியில் அங்கிருந்து வெளியேறுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இருப்பினும், ஈராக்கிய இராணுவத்துக்கு தொடர்ந்தும் பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் அமெரிக்கா வழங்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈராக்கியப் பிரதமர் Mustafa al-Kadhimi உடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஈராக்கில் தற்போது 2,500 அமெரிக்க படையினர் நிலைகொண்டுள்ளனர்.
இவர்கள் ஐஎஸ் அமைப்பின் மீதமுள்ள ஆயுததாரிகள் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில், ஈராக்கிய படைகளுக்கு உதவிபுரிந்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படையினர் தற்போது உள்ளவாறே ஈராக்கில் தங்கியிருக்கவுள்ளதாக நம்பப்படுகின்றது.
இந்த நிலையில் தற்போதைய நடவடிக்கையானது ஈராக்கிய பிரதமருக்கு அரசியல் ரீதியாக உதவி புரிவதற்கான செயற்பாடாகப் பார்க்கப்படுகின்றது.
ஈராக் தலைநகர் பக்தாத்தில் வைத்து ஈரானிய சிரேஷ்ட இராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கடந்த ஆண்டு கொல்லப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, ஈராக்கில் அமெரிக்காவின் பிரசன்னம் பாரிய பிரச்சினையாகத் தோற்றம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு தலிபான்களின் அட்டகாசம் கையோங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்களின் வசமாகும் நிலையும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி:
S.MD.ரவூப்