குளத்தூரில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து விலை உயர்ந்த கோழிகள் திருட்டு

சூலூர் அருகே குளத்தூர் பகுதியில் இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர். மேலும் அங்கிருந்து 10 விலை உயர்ந்த கட்டு சேவல்களை திருடிச் சென்றனர்.

இதுபற்றி சூலூர் காவல்துறையில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சூலூர் அருகே குளத்தூர் பகுதி உள்ளது. இங்கு அடிக்கடி திருட்டு மற்றும் குற்ற நிகழ்வுகள் நடக்கின்றன. இதனைத் தடுக்க காவல்துறையின் அறிவுரையின்படி பல வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குளத்தூரில் தட்டான் தோட்டம் பகுதியில் சக்திவேல் வசித்து வருகிறார். நள்ளிரவு மர்ம நபர்கள் அவரது வீட்டில் இருந்த விலை உயர்ந்த 10 கோழிகளை

திருடிச் சென்றனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்துள்ளனர். சில கேமராக்களை அதன் திசையை மாற்றி திருப்பி வைத்துள்ளனர்.

இதனை அடுத்து அதே பகுதியில் உள்ள சுகுமார் என்பவரின் வீட்டிலும் மதில் சுவர் தாண்டி உள்ளே வந்து நோட்டமிட்டு உள்ளனர்.

அப்போது அப்பகுதியில் இருந்த நாய்கள் குறைத்ததன, வீடுகளில் விளக்குகள் எரிந்ததால் உடனடியாக அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றனர்.

தப்பிச் செல்லும் போது அவர்கள் கொண்டுவந்த கத்தி கொடுவாள் மற்றும் அரிவாள் ஆகிய ஆயுதங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனர்.

இந்த திருட்டில் 5 பேர் ஈடுபட்டிருப்பது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. புதன்கிழமை காலை இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் சூலூர் ஒன்றிய கவுன்சிலர் தாரணி ஜெகதீஷ் ஆகியோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமராக்களில் உள்ள காட்சிகளின் உதவியுடன் மர்ம நபர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் கு.ஶ்ரீசரவணகுமார்.

திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.