மாநில செய்திகள் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவையை அனுமதிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை.

தொற்று அதிகமுள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என பரிந்துரை அளித்துள்ளது. 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என வல்லுநர் குழு பரிந்துரையில் தெரிவித்துள்ளது. நோய்த்தொற்று குறையாத மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க வேண்டாம் எனவும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. தொற்று குறைந்த மாவட்டங்களில்பெரிய வணிக நிறுவனங்கள் மால்கள் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மருத்துவ வல்லுநர் குழுவுடனான ஆலோசனை முடிந்துள்ள நிலையில், உயர் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் என்னென்ன? என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் ?மலர் மின்னிதழ் செய்தியாளர்
தமீம் அன்சாரி

Leave a Reply

Your email address will not be published.