புதிய கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்களை -முதலமைச்சர் மு க ஸ்டாலின்- நாளை தொடங்கி வைக்கிறார்

கொரோனா 2-வது அலையின் தாக்கம் நீடிப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் இப்போது திறக்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர மாற்று விதிகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான புதிய காணொலிகள் கல்வித் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த காணொலிகளில் தொடக்க கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையிலான பாடப்பகுதிகள் இடம்பெறும்.

இதற்கான பாடத்திட்டங்கள் கல்வி தொலைக்காட்சி படப்பிடிப்பு தளங்களில் தயாரிக்கப்படும். இந்த காணொலிகள் கடந்த ஆண்டைப்போல் 10-க்கும் மேற்பட்ட தனியார் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்பட உள்ளன.

கல்வி தொலைக்காட்சி மூலமாக புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் நாளை (சனிக்கிழமை) காலை தொடங்கி வைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்களையும் அவர் வழங்க உள்ளார்.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

செய்தியாளர் ரஹ்மான் தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.