தென்காசி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது

கொரோனா தடுப்பூசிகள்

தற்போது நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை இருந்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தென்காசி மாவட்டத்தில் தொடக்கத்தில் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன.

இதையடுத்து வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

இளைஞர்கள் ஆர்வம்

இந்த நிலையில் கலெக்டர் சமீரன் உத்தரவுப்படி கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. நேற்று தென்காசி மாவட்டத்தில் 52 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றில் 18 வயது முதல் 44 வயதுவரை உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மேலும் 44 வயதுக்கு மேற்பட்ட சிலரும் இந்த முகாம்களில் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டனர். தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசை செயின்ட் மேரிஸ் ஐ.டி.ஐ. வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டனர்.

இதில் இலஞ்சி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சங்கரி, செயின்ட் மேரிஸ் குழும தாளாளர் டாக்டர் பவுலின் சொர்ணலதா, தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பக்க விளைவு இல்லை

இதேபோன்று செங்கோட்டை பிரானூர் பார்டரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குற்றாலம் ரோட்டரி சங்கம், தென்காசி – செங்கோட்டை மரம் வியாபாரிகள் சங்கம், செங்கோட்டை படேல் சமாஜம் ஆகியவற்றின் சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 450 பேர் கலந்துகொண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டனர்.

அப்போது தடுப்பூசி செலுத்தி கொண்ட தென்காசியை சேர்ந்த ரம்யா (வயது19) என்பவர் கூறுகையில், கொரோனா நோய் நம்மைத் தாக்காமல் இருக்க, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது என்று டாக்டர்களும் அரசும் கூறுகிறது. எனவே இதனை நாம் கருத்தில் கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

1 லட்சம் பேருக்கு

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 292 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி முகாம்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் யோகானந்த் தலைமையில் மருத்துவக் குழுவினர் செய்திருந்தனர்.
-செய்தியாளர்
செய்யது அலி

Leave a Reply

Your email address will not be published.