தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் சுகாதார துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், கேரளா, தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஆலப்புழாவில் உள்ள நெடுமுடி, செருதனா, புறக்காடு உள்ளிட்ட 8 ஊராட்சிகளிலும், கோட்டயத்தின் சில வார்டுகளிலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருப்பூர் ஆகிய ஆறு எல்லை மாவட்டங்களில் தீவிர கண்காணிப்புச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
