கைதிகளுக்கு வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு, ஆண் கைதிகளுக்காக பெட்ரோல் விற்பனை நிலையம் சென்னை புழலில் முதல்முறையாக திறக்கப்பட்டது.. பிறகு, திருச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் சிறைத்துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டு, இவைகளை ஆண் கைதிகள் இயக்கி வருகிறார்கள். வேலூர் மத்திய சிறையில் பெண் கைதிகளுக்கு அழகு கலைப் பயிற்சி முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது… அதுமட்டுமல்ல, சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட ‘சிறை அங்காடி’கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும், சிறைக்குள் ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிப்பு, நெசவு, விவசாய உற்பத்தி என பல பணிகளை சிறைவாசிகள் செய்து வருகிறார்கள். தற்போது, மதுரை மத்திய சிறையில் டிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவுப்படி கோழிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கு உற்பத்தி செய்யப்படும் கோழிகளை இறைச்சியாக்கி புதன், ஞாயிறு அன்று கைதிகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் சிறை நிர்வாகத்திற்கு செலவினம் குறைந்துள்ளது.மொத்தம் 6 குடில்கள் அமைக்கப்பட்டு தலா 1300 கோழிகள் வளர்க்கப்படுகின்றன.. இவைகளை 20 கைதிகள் பராமரித்து வருகின்றனர்.. பொதுமக்களும் சிக்கன் வாங்கும் வகையில் சிறை வளாகத்திலேயே, புதிய கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 நாட்களில் கோழியாக உற்பத்தி செய்து, அவை இறைச்சியாக்கப்பட்டு, கைதிகளுக்கு தலா 150 கிராம் வழங்கப்படுகிறது. இதில், மதுரை சிறைக்கு மட்டும் நேற்றைய தினம் 340 கிலோ கோழிக்கறி வழங்கப்பட்டிருக்கிறது.. அதேபோல, மாவட்ட சிறைகளுக்கு தலா 40 கிலோ வரை வழங்கப்பட்டுள்ளது..