எலான் மஸ்க்
அமெரிக்க அரசியலில் டிரம்பிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து புயலைக் கிளப்பியவர் தொழிலதிபர் எலான் மஸ்க். இதற்கிடையே இவர் இப்போது அமெரிக்காவைத் தாண்டி ஐரோப்பிய அரசியலிலும் குதித்துள்ளார். எலான் மஸ்க் வெறும் ஆதரவோடு நிற்காமல் டிரம்பிற்காக இறங்கி பிரச்சாரமும் செய்தார். அதற்கு மக்களிடையே நல்ல ஆதரவும் கூட கிடைத்தது. இதனால் டிரம்ப் நிர்வாகத்திலும் கூட எலான் மஸ்கிற்கு நல்ல ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே எலான் மஸ்க் ஜெர்மனியில் உள்ள தீவிர வலதுசாரி கட்சியான ஆல்டர்நேட்டிவ் ஃபார் டாய்ச்லாண்ட் கட்சியின் பிரச்சார கூட்டம் நேற்று நடந்த நிலையில், அதில் எலான் மஸ்க் பங்கேற்றார். ஜெர்மனி நாட்டு மக்கள் வலதுசாரி கட்சிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதுவே வளர்ச்சியைத் தரும் என்றும் அவர் பேசினார். ஆல்டர்நேட்டிவ் ஃபார் டாய்ச்லாண்ட் கட்சியின் தலைவர் அலிஸ் வீடலுடன் இந்த பிரச்சார கூட்டத்தில் எலான் மஸ்க் வீடியோ கால் மூலம் கலந்து கொண்டார். ஜெர்மனி மக்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது மற்றும் ஜெர்மன் மக்களைப் பாதுகாப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த வாரம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் எலான் மஸ்க் ஹிட்லர் சல்யூட் அடித்தாக சர்ச்சை கிளம்பிய நிலையில், ஒரே வாரத்தில் அவர் ஜெர்மனியிலேயே தீவிர வலதுசாரி கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.