நீரின் உப்புத்தன்மையை மாற்ற விருதுநகரில் புதிய குளங்கள்
நீரின் உப்புத்தன்மையை மாற்ற விருதுநகரில் புதிய குளங்கள்
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 9.65 செ.மீ., மாநில சராசரியை விடக் குறைவு. மாவட்டத்தில் சிறுநீரகக் கோளாறால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு உப்புத் தன்மை கொண்ட நிலத்தடி நீர் முக்கிய காரணம். நிலத்தடி நீரின் தன்மையை மாற்ற மழைநீர் சேகரிப்பு அவசியம்.
அதற்கும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யவும் குளங்கள், கண்மாய்களை மறு சீரமைத்தல் முக்கியம் என உணர்ந்த மாவட்ட நிர்வாகம், புதிய குளங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ், 1,087 குளங்கள் உருவாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 266 புதிய குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள குளங்களை உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர்கள், ஓவர்சீயர்கள் குளங்களை வடிவமைக்கும் பணியை செய்கின்றனர்.
இதையும் படிங்க
நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த 93 குளம் வெட்டும் பணி விறுவிறு
குளத்தின் அளவு, ஆழத்தை நிர்ணயம் செய்ய நிலப்பரப்பில் ஆய்வு நடத்தி, நீர் மேலாண்மைக்கான முறையான நுழைவாயில், வெளியேறும் வழிகளைக் கொண்ட குளங்களை வடிவமைக்கின்றனர்.
கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:
குளம் உருவாக்க உள்ள பகுதிகளில் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடந்து வருகின்றன.
பெய்யும் மொத்த மழைநீரை குளங்களில் நிரப்புவதன் வாயிலாக விவசாயம், குடிநீர், நிலத்தடிநீர் மேம்பாடு அதிகரிக்கிறது. அறிவியல் பூர்வமாக நிலத்தடி நீர் செறிவூட்டல் நிகழ்வதால் நிலத்தடி நீரின் உப்புத் தன்மையும் குறைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.