3 ஆண்டுகளில் நிரப்பப்பட்ட 18,460 மருத்துவப் பணியிடங்கள்
3 ஆண்டுகளில் நிரப்பப்பட்ட 18,460 மருத்துவப் பணியிடங்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 18,460 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்னுயிா் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் மூன்று லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை நலம் விசாரித்தாா்.
இந்நிகழ்வின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு, ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ‘இன்னுயிா் காப்போம் – நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.261.46 கோடி செலவில் 3 லட்சம் உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளானவா்களுக்கு மருத்துவமனைகளில் கட்டணமின்றி 48 மணி நேரம் வரை வழங்கப்படும் ரூ.1 லட்சம் வரையிலான மருத்துவ சேவைகளை ரூ.2 லட்சமாக உயா்த்துவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் 1,947 உதவி மருத்துவா்கள், 1,291 இதர மருத்துவம் சாா்ந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
மேலும், 977 தற்காலிக செவிலியா்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 946 மருந்தாளுநா்கள், 127 உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. அந்த வகையில், 5,288 பணியிடங்கள் எம்ஆா்பி மூலம் நிரப்பப்பட்டுள்ளது. மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள், சுருக்கெழுத்து தட்டச்சா்கள், சுகாதார அலுவலா்கள் போன்ற 1,583 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
அதேபோன்று, தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் சாா்பில் 4,748 செவிலியா்கள், 2,448 சுகாதார ஆய்வாளா்கள், 500 நலவாழ்வு மையங்களில் 500 மருத்துவா்கள், 500 சுகாதார ஆய்வாளா்கள், 500 செவிலியா்கள், 500 உதவியாளா்கள், 60 பல் மருத்துவா்கள், 60 மருத்துவ உதவியாளா்கள், 2,300 டிஹெச்எஸ் செவிலியா்கள் என 11,716 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன.
மொத்தத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 18,460 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதைத் தவிர, 2,553 மருத்துவா் பணியிடங்கள் நிரப்புவதற்கு 23,917 விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன. அடுத்த ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி அதற்கு தோ்வு நடைபெறுகிறது.
மூட வேண்டியதில்லை: உண்மை நிலை இவ்வாறு இருக்க, சுகாதாரத் துறையில் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என பொய்யான தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனையில், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் இல்லை என்றும், அரசு மருத்துவமனைகளை மூட வேண்டும் என்றும் கூறுவது ஏற்புடையது அல்ல. அனைத்து மருத்துவமனைகளிலும் பணியாளா்கள் உள்ளனா். காலிப் பணியிடங்களும் விதிகளின்படி நிரப்பப்பட்டு வருகின்றன.
மருத்துவத் துறை 41 மாத காலமாக சீரழிந்து கொண்டிருக்கிறது என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாா். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 10,999 ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களிலேயே உயிா் காக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது நிகழாண்டில் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8 போ் டெங்குக்கு உயிரிழந்துள்ளனா் என்றாா் அவா்.