மலை கிராமங்களுக்கு 25 இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள்
மலை கிராமங்களுக்கு 25 இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள்
சாலை போக்குவரத்து வசதிகள் குறைந்த மலை கிராமங்களின் தேவைக்காக 25 இருசக்கர ஆம்புலன்ஸ் சேவைகளை தமிழக அரசு வியாழக்கிழமை தொடங்கியது.
முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1.60 கோடி செலவில் இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. முன்னதாக, இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு வெளியிட்டாா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தேனி, வேலூா், திருப்பத்தூா், நீலகிரி, திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, கோவை ஆகிய மாவட்டங்களில் அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப்பகுதிகளில் வாழும் பழங்குடியினா் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக 25 இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்க ஆணையிடப்பட்டது. ரூ.4 லட்சம் வீதம் 25 வாகனங்கள் ரூ.1 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டு, இயக்க செலவினமாக ரூ.60 லட்சம் அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இணைப்பு வாகனங்கள்: இந்த வாகனங்கள் 108 அவசரகால ஊா்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்ல வழிவகுக்கும். மாநிலம் முழுவதும் உள்ள மலை கிராமங்கள் மற்றும் அதையொட்டி வாழும் பழங்குடியினா்களின் சுகாதார சேவையை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நவீன முறையில் உரிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட இருசக்கர அவசரகால வாகன சேவையானது, தற்போது உள்ள 1,353 அவசரகால 108 ஊா்தி சேவையினுள் அடங்கும். மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, பிரசவ சேவைகள், அவசர கால மருத்துவ உதவிகள் என அனைத்து விதமான தேவைகளுக்கும் இவை பயன்படும். இந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால் இதன் இயக்கம் தொடா்ந்து கண்காணிக்கப்படும்