காசாமுனையில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவதிற்கும் போர்
காசாமுனையில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவதிற்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. மேலும் ஈரான் மீதும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த சூழலில், இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட் அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி இருப்பதாவது:
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையில் நான் முற்றிலும் நம்பிக்கையை இழந்துவிட்டேன். காசா போர் நடவடிக்கையின் போது எனக்கு யோ கேலண்ட் மீது நம்பிக்கை இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது. பிரச்னையை சரி செய்ய முயன்றும் முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த காட்ஸ், பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார் எனவும், வெளியுறவுத்துறை அமைச்சராக கிதியோன் பதவியேற்பார் எனவும் அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவிநீக்கத்தை தொடர்ந்து யோவ் காலண்ட், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
இஸ்ரேலின் பாதுகாப்பு என்பதே எப்போதும் எனது வாழ்வின் முக்கியமான லட்சியமாக இருந்து வருகிறது. இனிமேலும் அப்படியே இருக்கும் என பதிவிட்டுள்ளார்.