சூரசம்ஹாரமே நடக்காத முருகப்பெருமானின் படைவீடு – எது?

கந்த சஷ்டி  விரதம்

கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரமே நடக்காத முருகப்பெருமானின் படைவீடு – எது? ஏனென்று காரணம் தெரியுமா? அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்:

திருத்தணிகை:

முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த தலம் என்பதால், திருத்தணிகை முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம் நிகழ்வதில்லை. சூரசம்ஹாரம் நடைபெறாமல் கந்த சஷ்டி விழா மட்டும் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது
ஐப்பசி மாதம் தீபாவளிக்கு பிறகு அனைவரும் எதிர்நோக்கும் திருவிழா,கந்த சஷ்டிப் பெருவிழா தான். ஐப்பசி அமாவாசைக்கு அடுத்து வரும் ஆறு நாட்களும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி விழா களைகட்டும்.

முருக பக்தர்கள் அனைவரும் விரதம் அனுஷ்டித்து,சதா சர்வ காலமும் முருகப்பெருமானின் நினைவிலேயே லயித்திருப்பார்கள்.முருகப்பெருமானின் துதிப்பாடல்களைப் பாடுவதும்,அவன் குடியிருக்கும் ஆலயங்களைத் தேடித் தேடிச் சென்று தரிசிப்பதுமாக முருகன் நினைவிலேயே நாளும் பொழுதும் தங்களைக் கரைத்துக் கொண்டிருப்பார்கள்

சஷ்டியின் நிறைவான ஆறாவது நாள்,உணவும் நீரும் இல்லாமல் சிரத்தையுடன் விரதம் இருந்து,அன்று மாலை சூரபத்மனையும் அவனுடைய சகோதரர்களையும் முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் அற்புதத்தைக் கண்டு மகிழ்வார்கள்.

அப்போதே அவர்களுடைய மனங்களில், ‘இனி தங்கள் வாழ்க்கையில் தொல்லைகளும் துன்பங்களும் தொடராது; தங்கள் மனங்களில் அசுர குணம் தலையெடுக்காது’என்ற எண்ணம் ஏற்பட்டு,முருகப்பெருமானை பக்திப் பெருக்குடன் வழிபட்டு,மறுநாள் காலை விரதத்தை நிறைவு செய்வார்கள்

அனைத்து முருகத் தலங்களிலும் இந்த கந்த சஷ்டித் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும் அதே தருணத்தில், முருகப்பெருமானின் ஒரு படைவீடு மட்டும் சூரசம்ஹாரம் இல்லாமல் அங்கே பூக்களால் அபிஷேகம் நடைபெறும். *அந்தத் தலம் திருத்தணிகை திருத்தலம்.

ஐங்கரன் தம்பியின் ஐந்தாவது திருத்தலம் இது. முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த தலம் என்பதால்,இங்கே சூரசம்ஹாரம் நிகழ்வதில்லை. தணிகை மலையில் முருகப்பெருமான் அன்பும் கருணையும் மட்டுமே கொண்டு அருள்புரிகிறான். முருகப்பெருமான் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடக்கும் போது திருத்தணிகை மலையில் முருகனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. .

முருகப் பெருமானின் சினம் தணிந்து அருளும் தலம் என்பதால் தான் இங்கு சூரசம்ஹாரம் நடைபெறாமல் கந்த சஷ்டி விழா மட்டும் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது வள்ளித் திருக்கல்யாணம் மட்டும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருமணத்தைக் கண்டால், திருமணம் தடைப்படுகிறவர்களுக்கு  விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்!!

மலைகளில் சிறந்த மலை ‘திருத்தணிகை’ என்று போற்றிக் கூறுகிறது கந்த புராணம். திருத்தணிகைக்குச் சென்று முருகப் பெருமானை நினைத்தாலோ அல்லது திருத்தணிகை இருக்கும் திசையில் முருகனை மனதில் நிறுத்தி வணங்கினாலோ, தணிகை இருக்கும் திசையை நோக்கிப் பத்தடி தூரம் நடந்தாலோ வாழ்வில் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு.

சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இழந்த தனது சக்கராயுதத்தை மகாவிஷ்ணு, திருத்தணிகை முருகனை வழிபட்டு தான் திரும்பப் பெற்றார் என்கிறது கோவில் தலபுராணம். *விஷ்ணு பகவான் உருவாக்கிய விஷ்ணு தீர்த்தத்தில் நீராடி,தணிகைமலை முருகனை வழிபட்டால் நோய்கள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருத்தணி கோவிலில் முருகனுக்கு வேல் கிடையாது என்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பாகும். ஆறுபடை வீடுகளில் திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம் அமைந்திருக்கிறது.

திருத்தணிகைத் தலத்தில் வழங்கப்படும் விபூதி,சந்தனம் ஆகிய பிரசாதங்கள் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருத்தணிகையில் பக்தர்கள் புஷ்பக்காவடி எடுப்பது சிறப்பு. நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும்,மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருட்களும் கட்டி காவடி எடுப்பது திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்கள்,மூலவர் உட்பட அனைத்து சந்நிதிகளையும் தரிசித்த பிறகு, *நிறைவாக இங்குள்ள ஆபத் சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில்,கீழேயுள்ள ஸ்ரீ ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து,முருகனுக்கு அரோகரா என்ற சரண கோஷத்துடன் பக்தர்களால் சுமந்து செல்லப்படும் 1008 பால் குடங்கள் மலை மேல் உள்ள முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கண் கொள்ளாக் காட்சி. மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்

Leave a Reply

Your email address will not be published.