2.5 ஏக்கர் பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது
ராணிப்பேட்டை அருகே வேலம் பகுதியில் கனமழையால் 2.5 ஏக்கர் பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வடக்கிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த சில தினங்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை பெய்தது. இதில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக அம்மூர், ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம், ராணிப்பேட்டை, கலவை, காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் வட்டாரத்தில் வேலம், மருதாலம், காட்ரம்பாக்கம், ஜம்புகுளம், கொடைக்கல், போளிப்பாக்கம், தப்பூர், தாலிக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது அறுவடை நேரத்தில் சில தினங்களாக பெய்த மழையால் பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இதேபோல் வடக்கிழக்கு பருவ மழையினால் வேலம் கிராமத்தில் 2.5 ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு காத்திருந்த நெல் பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. எனவே மாவட்டத்தில் மழையால் சேதமடைந்துள்ள பயிரினை ஆய்வு செய்து உரிய இழப்பீடு தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்