சென்னையில் இருந்து மதுரைக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோருக்காக சிறப்பு ரயில்கள்
சென்னையில் இருந்து மதுரைக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோருக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் புதிதாக தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலையொட்டி, அக்டோபர் 29, 30, நவம்பர் 2ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல பலரும் ஆயத்தமாகி வருகிறார்கள். பெரும்பாலானோர் நாளை முதல் கிளம்புகிறார்கள். நாளை தொடங்கி, திங்கள்,செவ்வாய், புதன் ஆகிய நான்கு நாட்களுமே மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது இல்லை.. ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் 2000 ரூபாய்க்கு மேல் உள்ளது. மதுரைக்கு வரும் 29ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் டிக்கெட் கட்டணம் 4000 வரையிலும் இருக்கிறது.
அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. கடைசி நேரத்தில் அறிவிக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்குத்தான் மக்கள் காத்திருக்கிறார்கள். பல ஆயிரம் சிறப்பு பேருந்துகள் கூட்டத்தை பொறுத்து இயக்கப்பட உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
என்னதான் பேருந்துகளை அரசு ஏற்பாடு செய்தாலும் ரயில்களில் பயணம் செய்ய முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனெனில் டிக்கெட் கட்டணம் ரயிலில் மிக குறைவு. அதேநேரம் உடல் சோர்வும் ஏற்படாது. கழிவறை வசதியும் உள்ளது. ரயில்களில் பயணித்தால் பலருக்கும் பயண களைப்பு ஏற்படாது. குறிப்பாக முதியவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை சமயத்தில் ரயிலில் செல்வது தான் எளிதானது ஆகும்.
எனவே பலரும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே இந்த முறை பல சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோருக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் எப்படி என்றால், தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலையொட்டி, அக்டோபர் 29, 30, நவம்பர் 2ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் வரும் செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மதுரையில் இருந்து காலை 8.15க்கு புறப்பட்டு, திண்டுக்கல்லுக்கு 9.22க்கும், திருச்சிக்கு 10.30க்கும், அரியலூருக்கு 11.38க்கும். விருத்தாச்சலதிற்கு 12.18க்கும், விழுப்புரத்திற்கு மதியம் 1.08க்கும் வரும். மேல்மருவத்தூருக்கு 2.08க்கும். செங்கல்பட்டிற்கு 2.38க்கும், தாம்பரத்திற்கு பிற்பகல் 3.25க்கும் வரும்.
அதேபோல் மறுமார்க்கமாக வரும் அக்டோபர் 29, 30. நவம்பர் 2ம் தேதிகளில் மாலை 5.10க்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டிற்கு 5.38க்கும், மேல்மருவத்தூருக்கு மாலை 6.08க்கும், விழுப்புரத்திற்கு இரவு 7.13க்கும், விருத்தாச்சலத்திற்கு இரவு 8.08க்கும், அரியலூருக்கு 9.13க்கும், திருச்சிக்கு 10.35க்கும், திண்டுக்கல்லுகு 11.52க்கும், மதுரைக்கு மறுநாள் அதிகாலை 1.20க்கு (புதன்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) சென்று சேரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு உடனடியாக துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.