நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள்
தீபாவளி மற்றும் சத் பூஜையையொட்டி நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
வேலைக்காக நகரங்களில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வகையில் பண்டிகை காலங்களில் ரயில்வே துறை சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் சத் பூஜைக்காக 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 7,000 ரயில்கள் இயக்கப்படும் என்று இன்று செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதன் மூலமாக தினமும் கூடுதலாக 2 லட்சம் பயணிகள் ரயில்களில் பயணம் மேற்கொள்வார்கள் என்றும், ரயில்களில் நெரிசலைக் குறைக்கவும் மக்கள் எளிதாக ஊருக்குச் செல்லவும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் சில ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வடக்கு ரயில்வே இந்தாண்டு 3,050 நடைகள் சிறப்பு ரயில்களை இயக்கியதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதன் எண்ணிக்கை 1,082 ஆக இருந்தது.