அங்காரா துருக்கியில் ஏரோஸ்பேஸ்

அங்காரா துருக்கியில் ஏரோஸ்பேஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில், துசாஸ் என்ற நிறுவனம், தலைநகர் அங்காராவிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள கஹ்ராமன்காசானில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ராணுவத்திற்கு தேவையான போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கப்பட்டு வருகிறது.

துருக்கி நாடே இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறது. இங்கு நேற்று மாலை சந்தேகத்திற்கு இடமாக ஆண், பெண் உள்ளே நுழைந்தனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியபோது, மோதல் ஏற்பட்டது. சந்தேக நபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டனர். இதில் 12க்கும் அதிகமானவர்கள் மீது குண்டு பாய்ந்தது. 5 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு பாதுகாப்புப் படையினர், போலீசார், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் விரைந்துள்ளன. இதனால் அப்பகுதி கலவர பகுதியாக காட்சி அளிக்கிறது.

பாதுகாப்பு அதிகாரிகளும் பதிலடி கொடுத்தனர். இதில் இருவரும் கொல்லப்பட்டனர். இதனை துருக்கி அதிபர் எர்டோகன் உறுதி செய்திருக்கிறார். தாக்குதல் நடந்தபோது அவர், ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்யா, நேட்டோ உள்ளிட்டவை இரங்கல் தெரிவித்திருக்கின்றன. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை. குர்தீஷ் பிரிவினைவாதிகள் அல்லது ஐ.எஸ். பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

.இருப்பினும், குர்தீஷ் போராளிகள் மீது துருக்கி அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். தென்கிழக்கு துருக்கியில் தன்னாட்சிக்காக அப்துல்லா ஒகாலனின் குழு போராடி வருகிறது. இந்த குழு ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் அமைப்பு என, மேற்கத்திய நாடுகளால் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த குழுவை சேர்ந்தவர்கள்தான் இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என துருக்கி அரசு சந்தேகம் தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.