கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து இன்று ஆலப்புழா, எர்ணாகுளம் உள்பட 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் மழை மேலும் தீவிரமடைந்து உள்ளது.
திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நேற்று எர்ணாகுளம் உள்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் விதுரா-போணக்காடு சாலையில் கணபதிப்பாறை என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மண்ணை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
வாமனபுரம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதைத் தொடர்ந்து விதுரா-பொன்னாம்சுண்டு பாலம் மூழ்கியது. கனமழையைத் தொடர்ந்து காட்டாக்கடையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையே இன்று பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
