கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அக்கரையில் கழிவு நீர் லாரி மோதி, கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். விதிமுறையை மீறி எதிர் திசையில் வந்த பைக்கிற்கு வழிவிட வலது பக்கம் நகர்ந்த போது பின்னால் வந்த கழிவுநீர் லாரி மோதியதில் கேத்ரின் என்ற மாணவி உயிரிழந்தார். மாணவி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உடன் வந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, செம்மஞ்சேரியில் உள்ள புகழ் பெற்ற தனியார் பல்கலைக்கழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த கேத்ரின் என்ற மாணவி படித்து வந்தார். அவர் இன்று சுமார் 12 மணியளவில் அவரின் ஆண் நண்பரோடு சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்வதற்காக சோழிங்கநல்லூரிலிருந்து அக்கரை வழியாக சென்றுள்ளார்.
அப்போது பக்கிங்காம் கால்வாய் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது, போக்குவரத்து விதிகளை மீறி எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவதற்காக வலது பக்கம் திரும்பியபோது பின்னால் வந்த கழிவுநீர் லாரி, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கேத்ரின் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது மோதியதால் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கேத்ரினுடைய ஆண் நண்பர் இடதுபுறம் விழுந்ததில் காயமின்றி தப்பித்தார்
வலதுபுறமாக விழுந்த கேத்ரின் மீது கழிவுநீர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுத்துறை காவலர்கள் விபத்து ஏற்படுத்திய கழிவுநீர் லாரியை சிறைபிடித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த கேத்ரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போக்குவரத்து விதிகளை மீறி எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடும்போது ஏற்பட்ட ஏற்பட்ட விபத்தினால் கேத்ரின் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.