வார விடுமுறையை கொண்டாட, ஏற்காடு, ஆணைவாரி, பூலாம்பட்டி ஆகிய சுற்றுலா
வார விடுமுறையை கொண்டாட, ஏற்காடு, ஆணைவாரி, பூலாம்பட்டி ஆகிய சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்தும், அருவியில் குளித்தும் உற்சாகம் அடைந்தனர். வார விடுமுறையை கொண்டாட இன்று (ஞாயிறு) சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் படை யெடுத்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததால் தங்கும் விடுதிகள் நிரம்பின. சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, மான் பூங்கா, லேடீஸ் மற்றும் ஜென்ட்ஸ் சீட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தனர். ஏற்காட்டில் நேற்றிரவு பரவலாக மழை பெய்ததால், குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி முட்டல் கிராமத்தில் கல்வராயன் மலை அடிவாரத்தில் ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்த காரணத்தால், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீர்வீழ்ச்சியில் குளித்தும், முட்டல் ஏரியில் படகு சவாரி செய்தும் உற்சாகமாக பொழுதை கழித்தனர். மேலும் அவர்கள் குடில் பூங்காவை சுற்றிப்பார்த்து ரசித்தனர்.
இதேபோல், இடைப்பாடி அருகேயுள்ள பூலாம்பட்டியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினருடன் வந்த மக்கள், விசை படகில் சவாரி செய்து இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தனர். மீன் கடை, ஓட்டல்களில் அதிகம் கூட்டம் காணப்பட்டது. காவிரி கரையோரத்தில் உள்ள நந்தி கைலாசநாதர் கோயில், மாட்டுக்காரர் பெருமாள் கோயில், மூலப்பாரை பெருமாள் கோயில், கதவணை பாலம், திரைப்படங்கள் மற்றும் சீரியல் எடுத்த வயல் மற்றும் இதர பகுதிகளில் சென்று செல்பி எடுத்துக்கொண்டனர்.