இந்தியர்களுக்காக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் கூகுள்!
இந்தியர்களுக்காக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் ஃபார் இந்தியா 2024 என்ற நிகழ்வில், இந்தியாவின் சமூக கட்டமைப்பு, வணிகம் மற்றும் எளிதில் அணுகக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய அம்சங்களை வியாழக்கிழமை கூகுள் நிறுவனம் வெளியிட்டது.
ஜெமினி லைவ்
கூகுளின் செயற்கை குரல் நுண்ணறிவு செயலியான ஜெமினி லைவ் செயலியானது, பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விரிவான பதிலை அளிக்கும் திறன் கொண்டது.
பயனர்கள் குறிக்கிட்டு கேள்வி கேட்டால், அதற்கும் பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலி, தற்போது ஆங்கிலத்தில் பயன்பாட்டில் உள்ள நிலையில், விரைவில் ஹிந்தி மொழியில் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இந்திய மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், மராத்தி மற்றும் உருது மொழிகளிலும் ஜெமினி லைவ் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் லென்ஸ்
கூகுள் லென்ஸ் அம்சத்தை பிற நாடுகளை ஒப்பிடும்போது, இந்திய பயனர்கள்தான் அதிகளவில் பயன்படுத்துவதாகவும், மாதந்தோறும் கோடிக்கணக்கான பயனர்கள் உபயோகிப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது புகைப்படத்தை பயன்படுத்தி உபயோகித்து வரும் கூகுள் லென்ஸ், விரைவில் விடியோவை பதிவிடும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
விடியோவை பதிவிட்டு அதிலிருந்து ஒரு பொருள் குறித்து கேள்வி எழுப்பினாலும், கூகுள் நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் மேப்ஸ்
கூகுள் ஜெமினி மாடலின் உதவியுடன், கூகுள் மேப்பில் ஒரு இடத்தைத் தேடும்போது, அந்த இடத்தைப் பற்றி லட்சக்கணக்கானோர் குறிப்பிட்ட மதிப்புரைகளை பகுப்பாய்வு செய்து சுருக்கமான விளக்கத்தை அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அம்சங்கள், இந்த மாதத்துக்குள் வெளியிடப்படவுள்ளது.
மேலும், சுற்றுலாத் தலங்களில் பிறரின் அனுபவம் மற்றும் குறிப்பிட்ட பொருள்கள் குறித்து தேடினால், நுண்ணறிவு படங்களை ஆராய்ந்து தகுந்த பதிலையும் அளிக்கும்.
மழை வெள்ளம் மற்றும் மூடுப் பனிச் சாலைகளை துல்லியமாக கண்டறியும் வகையில் கூகுள் மேப் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சாலைகளை பார்ப்பதற்கு மட்டுமின்றி, கூகுள் மேப் செயலியில் பாதிக்கப்பட்ட சாலை குறித்த எச்சரிக்கையை பதிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இணைய பாதுகாப்பு.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், கூகுள் பே செயலியின் பாதுகாப்புக்கு அதிநவீன நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மட்டும் ரூ. 13,000 கோடி மதிப்பிலான பணம் மோசடி செய்யப்பட்டதாக புகார் வந்துள்ளது.
இதுதொடர்பாக, 4.1 கோடி எச்சரிக்கைகள் பயனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
’டிஜிகவாச்’ திட்டத்தின் மூலம் அரசுடன் இணைந்து நிதி மோசடியை குறைக்கவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருகின்றன.
திறமை வாய்ந்த பாதுகாப்புக் குழுக்கள் மூலம் ஆண்ட்ராய்டில், நிதி மோசடியை கட்டுப்படுத்த பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பயனர்களின் பாதுகாப்புக்காக நாள்தோறும் கூகுள் பிளே ப்ரொடெக்ட் செயலி மூலம் 20 கோடி செயலிகள் ஆராயப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் ஒரு கோடி போலிச் செயலிகள் கண்டறியப்பட்டுள்ளது.
கூகுள் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யாமல், வெளியில் இருந்து பதிவிறக்கம் செய்யும் செயலிகளை பகுப்பாய்வு செய்து மோசடி செயலிகளை தடுக்கும் முன்னோடித் திட்டம் இந்தியாவில் கொண்டு வரப்படவுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 9 லட்சம் போலிப் பதிவிறக்கங்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மற்றப் பகுதிகளிலும் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது.
கூகுள் பே.
கூகுள் பே செயலியில் கடன் பெறுவதற்கு நிதி நிறுவனங்களை அணுகும் முறை விரிவுப் படுத்தப்படுகிறது.
ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ், முத்தூர் ஃபைனான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் செயல்படவுள்ளது.
ஜெமினி மூலம் கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்க செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.