ஜப்பானில் கடந்த 23 ஆண்டுகளாக வெள்ள பாதிப்புகளை தடுக்க சுரங்கம்
மாறிவரும் காலநிலையால் உலக நாடுகள் பல்வேறு பேரிடர்களை சந்தித்து வரும் நிலையில் ஜப்பானில் கடந்த 23 ஆண்டுகளாக வெள்ள பாதிப்புகளை தடுக்க சுரங்கம் ஒன்று உதவி வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் காலநிலை மாற்றத்தால் குறுகிய காலகட்டத்தில் பெருமழை பொழிந்து எண்ணிலடங்கா சேதங்களை சந்திப்பது வழக்கமாகி வருகிறது. என்னதான் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்தினாலும் வெள்ளப் பாதிப்புகளை தடுக்க முடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றனர்.
ஆனால் புதிய கண்டுபிடிப்புகளின் தாயகமாக விளங்கும் ஜப்பானில் பாதாள சுரங்கம் ஒன்று கடந்த 23 ஆண்டுகளாக வெள்ள பாதிப்புகளை தடுக்க உதவி வருகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடக்கு பகுதியில் இந்த சுரங்கம் கட்டப்பட்டுள்ளது. 42 அடி அகலம், 59 அடி உயரத்துடன் சுமார் நான்கரை கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த சுரங்கம் அமைந்துள்ளது. இதற்குள் 18மீட்டர் உயரத்தில் தலா 500 டன் எடை கொண்ட பிரமாண்ட தூண்களும் அமைந்துள்ளன. பெருமழை பெய்யும் போது வடிகால்கள் மூலம் இந்த சுரங்கத்திற்குள் மழைநீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் கடந்த ஆண்டுகளில் டோக்கியோ நகரத்தில் வெள்ள பாதிப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் சுரங்க பணியாளர்கள். 1898ம் ஆண்டிற்கு பிறகு மிகவும் கடுமையான கோடைகாலத்தை நடப்பு ஆண்டு ஜப்பான் சந்தித்துள்ளது. இதனால் மழையின் அளவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 100 ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவுக்கு தண்ணீர் இருப்பு வைக்கக்கூடிய இந்த சுரங்கத்தை சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நாடைபெற்று வருகிறது.