ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 1056 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வை கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி நடத்தியது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் 14,627 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 650 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு கடந்த 20ம் தேதி தொடங்கியது. மெயின் தேர்வு இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் இத்தேர்வு நடந்தது. 20ம் தேதி அன்று கட்டுரை வடிவிலான தேர்வு நடந்தது.
தொடர்ந்து 21ம் தேதி காலையில் இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வும் நடந்தது. 22ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு4) தேர்வும் நடந்தது. சென்னையில் எழும்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பி.சி.கே.ஜி. அரசு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை சுமார் 650 பேர் எழுதினர். இந்நிலையில் இன்று மீண்டும் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நடைபெற்றது.
இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இந்திய மொழிகளில் ஒரு தாள் தேர்வும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஆங்கிலம் தேர்வும் நடைபெற்றது . கடைசி நாளான நாளை காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுகிறது. தேர்வு மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு உபரகரணங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெறும் மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
