புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என வழக்கறிஞர் ஆனந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சமீப காலமாக புழல் சிறை நிர்வாகம், விசாரணை கைதிகளை வழக்கறிஞர் நேரடியாக சிறையில் சந்தித்து வழக்கு தொடர்பாக பேசுவதற்கு அனுமதி மறுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறைக் கைதிகளை சந்திக்க ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டால் வழக்கறிஞர்கள், சிறையில் உள்ள தொலைப்பேசி மூலம் மட்டுமே பேசிக் கொள்ள முடியும், ஒரு விசாரணை கைதி மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படும் என புழல் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்ததுள்ளதாக குறிபிட்டுள்ளார். மேலும் சிறைகளில் வழக்கறிஞர்கள் நேரடியாக விசாரணை கைதிகளை சந்திக்க அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் காசிராஜன் ஆஜராகி, வழக்கு தொடர்பாக சிறைக் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, வழக்கறிஞர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என வாதம் வைத்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், புழல் சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளை அவர்களின் வழக்கறிஞர்கள் சந்திக்க எந்த தடையும் விதிக்க கூடாது என்றும் ஒரே நேரத்தில் ஒரு கைதியை மட்டுமே வழக்கறிஞர் பார்க்க வேண்டும் என்பதையும் மாற்றியமைக்க புழல் சிறை துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்கள் அவர்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தனி அறை மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க தமிழக சிறைத்துறைக்கு உத்தரவிட்டதோடு இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.