முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து சென்னை பெருநகர் காவல்துறையில் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய 19 பெண் காவலர்களை அவர்களின் விருப்பப்படி சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் வழங்கி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் குடியரசுத்தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் பெண் காவலர்களுக்கு சிறப்பு திட்டங்கள் பல ெவளியிட்டார்.

அதில் குறிப்பாக காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை, மகப்பேறு கால விடுமுறைக்கு பிறகு பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், தங்களது பிள்ளையை பராமரிக்கும் வகையில் அவர்களின் பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டை சார்ந்தவர்கள் வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதை உறுதி செய்யும் வகையில் முதல்வர் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் உடனே அதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கிணங்க அரசு உத்தரவினை நிறைவேற்றும் வகையில் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 19 பெண் காவலர்கள் அவர்களின் விருப்பப்படி சென்னை பெருநகர காவல் துறையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பணிமாறுதல் ஆணையினை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் செயல்படுத்தி அதற்கான உத்தரவும் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை தொடர்ந்து பணிமாறுதல் பெற்ற 19 பெண் காவலர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.