ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல்
தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தமிழ்நாட்டிலுள்ள சிறு நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் செலவிலும் மற்றும் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29.50 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார்.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் அண்மையில் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு 19 நிறுவனங்களுடன் 7616 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய அதீத வளர்ச்சியை கருத்திற்கொண்டு 2000-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது நம் மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது.