கல்வராயன் மலைப்பகுதிக்கு 4 வாரங்களுக்குள்

கல்வராயன் மலைப்பகுதிக்கு 4 வாரங்களுக்குள் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து 70 பேர் பலியாகினர். இதையடுத்து கள்ளச் சாராயம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் காய்ச்சப்படுவதாக தகவல் வெளியான நிலையில், கல்வராயன் மலை மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது அந்த பகுதியில் செய்யப்பட்டுள்ள பேருந்து போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர்கள் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர்கள் காணொலியில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சேலம் கோட்டம் சார்பில் கல்வராயன் மலைப் பகுதியில் 2 மினி பேருந்து, விழுப்புரம் கோட்டம் சார்பில் 10 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்று கூறினர்.

இதனையடுத்து நீதிபதிகள் இந்த விவகாரத்தில் லாபத்தை கருத்தில் கொள்ளாமல் கூடுதல் மினிப் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் அப்போது தான் அந்த பகுதி மக்கள், மாணவர்கள் பயனடைவர் என தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.