விருதுநகரில் ஒர்க்ஷாப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ
விருதுநகரில் ஒர்க்ஷாப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 15க்கும் மேற்பட்ட டூவீலர்கள் எரிந்து நாசமாகின. விருதுநகரில் உள்ள சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் செய்யது அகமது (58). இவர், கச்சேரி ரோட்டில் டூவீலர் ஒர்க்க்ஷாப் வைத்துள்ளார். இங்கு டூவீலர்கள் மற்றும் மின்மோட்டார், ஜெனரேட்டர், பம்ப் உள்ளிட்ட இயந்திரங்கள் பழுது நீக்கி தரப்படுகின்றன. நேற்றிரவு வேலை முடிந்து, பழுது நீக்க வந்த மின்மோட்டார்கள் மற்றும் டூவீலர்களை ஒர்க்ஷாப்பில் நிறுத்தி சென்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென ஒர்க்ஷாப் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 15க்கும் மேற்பட்ட டூவீலர்கள், மின்மோட்டார்கள், வாட்டர் பம்ப், கரும்புச்சாறு தயாரிக்கும் மிஷின், ஜெனரேட்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின. சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. செய்யது அகமது கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.