புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது
தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா அருகே கரையை கடந்த நிலையில், ஏற்பட்ட பெரும் மழை, வெள்ளப்பெருக்கால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கதேசம் பகுதியை ஒட்டி உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடமேற்கு வங்கக்கடலை ஒட்டிய மாநிலங்களின் பகுதிகளில் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.