திருப்பூரில் தீபாவளி பண்டிகை ஆடைகள் தயாரிப்பு

திருப்பூரில் தீபாவளி பண்டிகை ஆடைகள் தயாரிப்பு பணிகளை தொடங்கிய உற்பத்தியாளர்கள்.

திருப்பூர்:

பின்னலாடை நகரான திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பு தொடங்கி வெளிநாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்த இடத்தை எட்டிப்பிடித்துள்ளது.

அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டிக்கொடுத்து டாலர் சிட்டி என்ற பெருமையுடன் திகழ்கிறது.

வெளிநாட்டு ஆடை ஏற்றுமதியால் உலகம் அறிய செய்தாலும் உள்நாட்டு ஆடை வர்த்தகமும் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு ஆடை வர்த்தகம் நடக்கிறது.

பண்டிகை காலங்களில் உள்நாட்டு ஆடை உற்பத்தி அதிகம் நடைபெறுவது வழக்கம்.

குறிப்பாக தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் நோக்கி வியாபாரிகள் வந்து ஆர்டர் கொடுத்து ஆடைகளை பெற்று செல்கிறார்கள்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வெளிமாநில வியாபாரிகள் திருப்பூர் நோக்கி வந்து ஆர்டர் கொடுப்பது அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு பிறகு உள்நாட்டு வர்த்தகம் அந்தளவுக்கு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஆர்டர் வருகையை பார்க்கும்போது, கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் திருப்பூர் எப்படி பரபரப்பாக இருந்ததோ அந்த நிலையை எட்டி இருக்கிறது என்று உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி போன்ற பகுதிகளுக்கு உள்நாட்டு ஆடைகள் அதிகம் தயாரித்து வழங்கப்படுகிறது.

குறிப்பாக உள்ளாடைகள், பேஷன் ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் அதிகம் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. உள்ளாடை தயாரிப்பில் திருப்பூருக்கு தனி இடம் உண்டு.

பருத்தி ஆடைகளை பெரும்பாலும் தயாரித்து வந்த திருப்பூர் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், மெல்ல மெல்ல செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு தீவிரம் காட்டி வருகிறார்கள். பாலியஸ்டர் துணிகளில் பல ரகங்கள் உள்ளன.

தற்போது துணிகளாகவே சந்தையில் விற்பனை செய்யப்படுவதால் துணிகளை வாங்கி ஆடைகளாக தயாரிப்பதற்கு சில நாட்களே ஆகும் நிலை உள்ளது.

அந்தளவுக்கு நவீன எந்திரங்கள், கட்டமைப்பு வசதிகள் திருப்பூரில் இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

பருத்தி துணிகளை தயாரிக்க முன்பெல்லாம், வர்த்தகர்கள் கூறியபடி நூல் எடுத்து அதை நிட்டிங் செய்து, தகுந்த நிறத்துக்கு சாயமேற்றி துணியாக கிடைப்பதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகிவிடும். அதன்பிறகு பிரிண்டிங், எம்ப்ராய்டரி, தையல் என ஆடை தயாரிப்பு நடக்கும்.

ஆனால் தற்போது பாலியெஸ்டர் மற்றும் பருத்தி துணிகளாகவே சந்தையில் எளிதில் கிடைப்பதால் பிரிண்டிங், எம்ப்ராய்டரிங், தையல் என 2 நாட்களுக்குள் ஆர்டர்களை முடிக்கும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது. உள்நாட்டு ஆடை தயாரிப்புக்கு தகுந்த சூழல் நிலவி வருகிறது.

பருத்தி ஆடை தயாரிப்பில் இருந்து செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். பாலியெஸ்டர் துணிகளாகவே விரும்பிய வண்ணங்களில் சந்தையில் கிடைக்கிறது.

ஆர்டர் கொடுத்த 2 நாட்களில் ஆடைகளை தயாரித்து அனுப்பும் அளவுக்கு நவீன தொழில்நுட்ப எந்திரங்கள் திருப்பூரில் உள்ளன. அதுபோல் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இங்கு இருக்கிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது.

தேவையான தொழிலாளர்கள் இருந்தால் இன்னும் ஆர்டர்களை தைரியமாக எடுத்து அனுப்பி வைக்க முடியும்.

சில நிறுவனங்களில் விடுதி அமைத்து தொழிலாளர்களை தங்க வைத்து வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அவர்களுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை என்ற பிரச்சினை இல்லை.

தீபாவளி ஆர்டர்களை ஆயுத பூஜையையொட்டி முடித்து அனுப்பி வைப்போம். தற்போது உள்நாட்டு ஆடை தயாரிப்பு பரபரப்பாக உள்ளது.

கொரோனாவுக்கு முன்பு திருப்பூர், உள்நாட்டு ஆடை உற்பத்தி எப்படி இருந்ததோ அதுபோன்ற சூழல் இந்த ஆண்டு தென்படுகிறது. தீபாவளி பண்டிகை தொழிலாளர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் உற்சாகமாக அமையும் என்று நம்புகிறோம்.

தமிழக அரசு பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க தயாராக உள்ளோம். அரசு எங்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூரில் தீபாவளி பண்டிகை ஆர்டர் அதிகரித்து உள்நாட்டு ஆடை தயாரிப்பு வேகமெடுத்துள்ளதால் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் பின்னலாடை தொழிலில் 21 மாநிலங்களை சேர்ந்த, 3 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் பீகார், ஒடிசா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் அதிகம்.

பின்னலாடை நிறுவனங்களுக்கு, தீபாவளி கால ஆர்டர் என்பது மிகவும் முக்கியம். வடமாநிலங்களில் இருந்து ஆர்டர் பெறப்பட்டு, உற்பத்தி துவங்கியுள்ளது.

3 வாரங்களுக்குள், உள்ளாடைகள், பின்னலாடைகளை உற்பத்தி செய்து அனுப்பி வைக்க திருப்பூர் பரபரப்பாக மாறியுள்ளது.

இந்நிலையில் பீகார், ஒடிசா மாநிலங்களில் இருந்து தகவல் வந்ததாக கூறி, அம்மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

நீண்ட இடைவெளிக்கு பின், பண்டிகைக்கால ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தொழிலாளர் சொந்த ஊர் செல்வதால் உற்பத்தியாளர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.

இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-

சொந்த மாநிலம் செல்லும் தொழிலாளரிடம் விசாரித்தபோது, ரேஷன் கார்டு பதிவுக்காக செல்வதாக கூறுகின்றனர்.

பீகார் மற்றும் ஒடிசாவில் விசாரித்தபோது, நிலம் சீரமைப்பு பணி நடக்கிறது என்றும், உரிமையாளர்கள் வரும் 30ந்தேதிக்குள் கையெழுத்திட வேண்டுமென, அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உண்மை நிலையை ஆராய்ந்து வருகிறோம்.

உற்பத்தி பரபரப்பாக நடக்கும் நேரத்தில், தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது எங்களுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.