காஸ் சிலிண்டரை போட்டு காளிந்தி எக்ஸ்பிரஸ்
உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தில் காஸ் சிலிண்டரை போட்டு காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை வெடிக்க வைக்க சதி நடந்துள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த பிவானி நோக்கி நேற்று இரவு 8.30 மணியளவில் காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. பர்ராஜ்பூர் – பில்ஹவுர் இடையிலான ரயில் பாதையில் நிரப்பப்பட்ட எல்பிஜி காஸ் சிலிண்டர் ஒன்று இருந்தது. தண்டவாளத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதைக் கண்ட லோகோ பைலட், உடனடியாக பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். ஆனால் காஸ் சிலிண்டர் ரயிலில் மோதியதால் பலத்த சத்தம் ஏற்பட்டது. ரயிலில் இருந்த பயணிகள் பெரும் பீதியடைந்தனர். தகவலறிந்த ரயில்வே மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவுகள் (ஏடிஎஸ்) சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில், ரயில் பாதையின் புதர்களில் இருந்து காஸ் சிலிண்டர், பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி, துப்பாக்கி குண்டுகள் மீட்கப்பட்டன. சுமார் அரை மணி நேரம் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்ட ரயில், பின்னர் அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அனைத்தும் விசாரணைக்கு அனுப்பப்பட்டன. ரயில் விபத்தில் சதி இருப்பதாக தெரிகிறது. இதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி இரவு, கான்பூர்-ஜான்சி வழித்தடத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது, 22 பெட்டிகள் தடம் புரண்டன.
தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பாறாங்கல்லில் மோதி சபர்மதி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதாக ரயில்வே கூறியுள்ளது. இதுகுறித்து உளவுத்துறையும் (ஐபி) உ.பி காவல்துறையும் விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மற்றொரு சம்பவமாக காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை வெடிக்க வைக்க நடந்த சதி அம்பலமாகி உள்ளதால், ரயில்வே போலீசார் உஷாராகி உள்ளனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.