சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை ஆசிரியர் தமிழரசி திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம். பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் அரசு முதற்கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார். ‘தன்னை உணர்ந்த தருணங்கள்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சைதாப்பேட்டை அரசுப் பள்ளியிலும் மகாவிஷ்ணு இதேபோன்ற சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த பொழுது கடவுள், மறுஜனனம் உள்ளிட்டவை குறித்தும் பேச தொடங்கினார். இவர் பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் அசோக் நகர் பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு ஆற்றியதற்கு தலைமை ஆசிரியர் அனுமதி அளித்ததற்கு அவரை பணியிடமாற்றம் செய்துள்ளனர்
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வெளியிட்டுள்ள பணியிட மாற்ற அறிவிப்பில், சென்னை மாவட்டம், அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமையசிரியராக பணிபுரிந்து வரும் ஆர்.தமிழரசி என்பவர் காலியாக உள்ள திருவள்ளூர் மாவட்டம், கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நிர்வாக மாறுதல் வழங்கி ஆணையிடப்படுகிறது.
மேற்காணும் தலைமை ஆசிரியர் பணிவிடுப்பு செய்யும்போது அவர் பணிபுரியும் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணிகள் பாதிக்காதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சென்னை முதன்மைக் கல்வி அலுவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.